பக்கங்கள்

பக்கங்கள்

20 பிப்., 2017

ஜெயிலில் தலையணை கேட்டாராம் சசிகலா! -நக்கலடிக்கும் இலங்கை அமைச்சர்!


1975-இல் வெளிவந்த திரைப்படம் பாட்டும் பரதமும். சிவாஜி கணேசனும் ஜெயலலிதாவும் ஆடுகின்ற போட்டி நடனப் பாடலில் ‘கலையின் பெருமை இலங்கை வரை கேட்குது’ என, கவிஞர் கண்ணதாசன் எழுதியிருப்பார். மேலும், ஜெயலலிதாவைப் பார்த்து சிவாஜி கேட்பது போல ‘ஆடிடும் பெண்ணே! நாடகம் என்ன?’ என்ற வரியும் அதே பாடலில் இடம் பெற்றிருக்கும். ‘அது சரி, அந்தப் பாடலுக்கு இப்போது என்ன?’ என்று கேட்கத் தோன்றுகிறதா? அப்படியென்றால்,  இலங்கை வரையிலும் சிறைக்குள் இருக்கும் சசிகலா விவகாரம் அடிபடுவதை தெரிந்து கொள்ளுங்கள்.  



இலங்கை சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஞ்சன் ராமநாயக்க. இவர் அந்நாட்டின் பிரதி (இணை) அமைச்சர் ஆவார். கேகாலை நகரில் ஐக்கிய தேசிய கட்சியினர் நடத்திய கூட்டத்தில் ரஞ்சன் ராமநாயக்க பேசிய போது, “கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைபட்டிருக்கும் சசிகலா, தனக்கு தலையணை, போர்வை, மின்விசிறி போன்ற சொகுசுகள் வேண்டும் என்று கேட்டுள்ளார். அவருக்கு எந்தவித சலுகைகளும் கொடுக்கப்படவில்லை. இலங்கையில் அவ்வாறெல்லாம் எதுவும் நடக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்பன் பில, தான் சிறையில் அடைக்கப்பட்ட போது, தலையணை கேட்டார். அதுவும் கூட தலைக்கு வைப்பதற்கு அல்ல. மேலும், பல சொகுசுகள் வேண்டும் என்றார். 

இலங்கையின் நிலை இவ்வாறு தொடர்கிறது. இந்திய அரசியல்வாதிகளுக்கும் இலங்கை அரசியல்வாதிகளுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் இதுதான். இலங்கையில் கைதாகும் அரசியல்வாதிகளுக்கு சலுகைகள் அளிக்கிறோம். எந்த அரசியல்வாதியையும் சசிகலாவைப் போல் நடத்துவதில்லை. இந்த நிலை மாற வேண்டும்.” என்று சசிகலாவைக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். 

இலங்கை அரசியல் தலைவர்களான மகிந்த, வாசுதேவ, தினேஷ் குணவர்தன போன்றவர்களை, சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருபவர் ரஞ்சன் ராமநாயக்க. வெறும் வாயை மெல்லும் இவர் போன்றவர்களுக்கு, அவல் போல ஆகிவிட்டார் சசிகலா.  
ம்ஹும். சசிகலாவின் பெருமையும் இலங்கை வரை கேட்குதே