பக்கங்கள்

பக்கங்கள்

28 பிப்., 2017

கூட்டமைப்பின் அறிக்கை கடும் அதிர்ச்சியளிக்கிறது: ஆனந்தநடராஜா லீலாதேவி

கூட்டமைப்பின் தலைவர் விடுத்துள்ள அறிக்கை எமக்கு கடும் அதிர்ச்சியையும், மனவருத்தத்தையும் அளிக்கிறது என
கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உப தலைவி ஆனந்தநடராஜா லீலாதேவி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான நாங்கள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றோம் எங்களின் போராட்டத்தின் நோக்கம் ஐ. நா இலங்கை அரசை கொண்டு காணாமல்ஆக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளிப்படுத்த வேண்டும்.
இலங்கை அரசுக்கு ஐ.நா பொறுப்பு கூறல் விடயத்திற்கு காலம் அவகாசம் வழங்க கூடாது. இவ்வாறு நாங்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நிபந்தனையுடன் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அறிக்கை விடுத்திருப்பது எமக்கு அதிர்ச்சியளிக்கிறது.
எங்களுடைய விடயத்தில் எம்முடன் கலந்தாலோசிக்காது, எங்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாது, இவ்வாறு அறிக்கை விட்டுள்ளார்கள்.
தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள எம்மை வந்து சந்திக்க முடியாதவர்கள் எம் தொடர்பில் அறிக்கையை மட்டும் விட்டுள்ளார்கள்.
எம்மை பற்றி கருத்து வெளியிடுவதற்கு சம்பந்தன் ஐயா பிரதிநிதிகளை அனுப்பி எமது கருத்தை பெற்றிருக்க வேண்டும்.
இதுவரை இவர்களால் எமக்கு எவ்விதமான தீர்வும் பெற்றுத்தர முடியாத நிலையில், இன்று நாங்களாகவே எமது உறவுகளுக்காக போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
இந்த நிலையில் எங்கள் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இவ்வாறு அறிக்கை விடுத்திருப்பது எமக்கு மனவருதத்தை அளிக்கிறது.
கடும் அதிர்ச்சியையும், துக்கத்தையும் அளிக்கின்றது. என்ன செய்வது என்று தெரியாத நிலையில் இருக்கின்றோம். எங்களுக்கு உதவி செய்யாது விட்டாலும் பரவாயில்லை.
ஆனால் எங்களது போராட்டத்தின் வேகத்தை குறைக்கும் வகையில் இப்படியொரு கருத்தையாவது வெளியிடாமல் இருந்திருக்கலாம்.
எங்களது இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்து ஊக்கப்படுத்த வேண்டிய இந்த நேரத்தில் இப்படியான கருத்தை வெளியிட்டிருப்பது மிகுந்த மனவருதத்தை அளிக்கிறது.
குறித்த அறிக்கையில் சம்பந்தன் ஐயா குறிப்பிட்டிருக்கின்றார், இலங்கை அரசு குறிப்பிடத்தக்க அளவு பொறுப்புக்களை நிறைவேற்றியிருக்கிறது என்று. எந்தப் அடிப்படையில் அவர் இவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை.
ஐ.நாவின் வற்புறுத்தால் கொண்டுவரப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சட்டத்தை கூட வலுவிலக்கச்செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளன. அரசை கணிசமான அளவு நிறைவேற்றியிருக்கிறது என்று சொல்லியிருகின்றார்.
பரவிபாஞ்சான் மக்களின் காணி விடுவிப்பு கூட எந்த அரசியல் வாதிகளினதும் நடவடிக்கையால் விடுவிக்கப்படவில்லை. பனியிலும் வெய்யிலிலும் மக்கள் உறுதியாக நின்று போராடியதன் விளைவாக தான் அந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
கடந்த காலத்தில் காணி மீட்புக்கான மக்களின் போராட்டத்தின் போது அரசியல்வாதிகள் வருகை தந்து வாக்குறுதிகளை மக்களின் போராட்டத்தை வலுவிக்கச் செய்தார்களே அன்றி அவர்களை ஊக்கப்படுத்தவில்லை.
ஒவ்வொரு பக்கத்தால் ஒவ்வொரு அரசியல் வாதிகள் வந்து வாக்குறுதிகளை எறிந்து விட்டு போராட்டத்தை மழுங்கடித்தார்களே தவிர வேறு எதனையும் செய்யவில்லை.
கடந்த காலத்தில் மக்கள் இவர்களது வாக்குறுதிகளை கணக்கில் எடுக்காது போராடியிருந்தால் பரவிபாஞ்சான் காணிகள் எப்போதே விடுவிக்கப்பட்டிருக்கும்.
எனவே கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் சார்பாக சம்பந்தன் ஐயாவின் அறிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
உடனடியாக மீணடும் இவர்கள் கால அவகாசம் வழங்க கூடாது என்று அறிக்கை விடவேணடும்.நாங்கள் இவர்கள் மீது நம்பிக்கை இழந்தே இந்தப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம் அரசியல்வாதிகள் மீது எமக்கு நம்பிக்கை இழந்துவிட்டது.
இதனை நாங்கள் வெளிப்படுத்தியிருகின்றோம். இந்த நிலையில் மீணடும் எங்களது போராட்டத்தை வலுவிலக்கச்செய்யும் வகையில் அறிக்கை விடுத்திருப்பது மிகவும் தவறானது என்பதை திட்டவட்டமாக கூறுகின்றேன் என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உப தலைவி ஆனந்த நடராஜா லீலாதேவி குறிப்பிட்டுள்ளார்.