பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2018

பதுளை தமிழ் பெண்கள் பாடசாலையின் அதிபரை மண்டியிடச்செய்த அரசியல்வாதி!

தான் சிபாரிசு செய்த மாணவியை பாடசாலையில் சேர்க்க மறுத்தமைக்காக பதுளை தமிழ் பெண்கள் பாடசாலையின் அதிபரை மண்டியிடச்செய்த அரசியல்வாதிக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கபே மற்றும் இலங்கை மனித உரிமைகள் மத்திய நிலையம் கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது
ஊவா மாகாணத்தின் பிரபல அரசியல்வாதியொருவர் மேற்படி பாடசாலை அதிபரை தனது உத்தியோகப்பூர்வ இல்லத்துக்கு வரவழைத்தே மண்டியிடச்
செய்திருப்பதாக தங்களுக்கு தெரியவந்துள்ளதென அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிக்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
ஊவா மாகாண சபைக்குச் சொந்தமான மேற்படி பாடசாலையில் மாணவியொருவரை சேர்த்துக் கொள்ளுமாறு ஊவா மாகாணத்தின் பிரபல அரசியல்வாதியொருவர் பாடசாலை அதிபருக்கு சிபாரிசுக் கடிதமொன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தை மாணவியின் பெற்றோர் பாடசாலை அதிபரிடம் கொடுத்தபோது அவர் அதனை ஏற்க மறுத்துள்ளார்.
அத்துடன் தான் கல்வி அதிகாரிகளின் பணிப்புரைக்கமைய செயற்படுவேனே தவிர அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்பட மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனை அப்பெற்றோர் அரசியல்வாதியிடம் தெரிவித்ததையடுத்து அவர் தனது ஆட்களையனுப்பி பாடசாலை அதிபரை அவரது உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வரவழைத்து தன்னிடம் மண்டியிட்டு மன்னிப்புக்கோருமாறு பலவந்தம் செய்துள்ளார்.
அங்கிருந்தவர்கள் அதிபரை பலவந்தமாக மண்டியிடச் செய்ததுடன் நிராகரிக்கப்பட்ட மாணவியை மீண்டும் பாடசாலையில் சேர்த்துக் கொள்ளுமாறும் அரசியல்வாதி பலவந்தம் செய்துள்ளார். இச்செயன்முறையானது அரசாங்க சேவைக்குரிய கெளரவத்தை கொச்சைப்படுத்தும் மனிதாபிமானமற்ற செயன்முறையென தாங்கள் கருதுவதால் அச்சம்பவம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வெண்டுகோள் முன்வைத்துள்ளார்.