பக்கங்கள்

பக்கங்கள்

19 பிப்., 2018

முரண்பாடுகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

அரசின் நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கூடிய நாடாளுமன்றம் பல்வேறு கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

புதிய பிரதமர் நியமனம், மற்றும் அரசாங்கத்தின் பொரும்பான்மையை நிருபித்தல் போன்ற விடயங்களில் அரச தரப்பிற்கும் எதிர்தரப்பிற்கும் இடையில் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரிய 15 நிமிடங்களுக்கு சபையை ஒத்திவைத்தார்.

குறிப்பாக தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாக விவாதம் ஒன்றை நடத்துமாறு கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன வேண்டு விடுத்தார். அதனையடுத்து ஏற்பட்ட குழப்பத்தினால் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் அறிவித்தார்

சபையில் குழப்பம் ஏற்பட்டதால் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பேசி முடிவெடுப்பதாக கூறிய சபாநாயகர் கூட்டத்திற்கு வருமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

அரசியல் பரபரப்பிற்கு மத்தியில் இன்று முற்பகல் கூடிய நாடாளுமன்றம் முதல் 10 நிமிடம் வரை தினப்பணிகளுக்காக அமைதியாக இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இரவு இடம்பெற்ற கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் கலந்து கொண்ட போதும் இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

அதேவேளை, ரணில் விக்ரமசிங்க பிரதமராக தொடர வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் விருப்பம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.