பக்கங்கள்

பக்கங்கள்

15 ஆக., 2018

கேரளாவில் கனமழை பெய்யும் நிலையில் மலப்புரத்தில் வீடு இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கேரளாவில் கடந்த 8-ம் தேதி தொடங்கிய கனமழை விடாமல் பெய்து வருகிறது, இதனால் மாநிலம் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இடர்பாடுகளில் சிக்கி தவித்து வருகிறது. மாநிலமே உருகுலைந்து காணப்படுகிறது. அணைகள் நிறைந்து வழிவதால் ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கொச்சி விமான நிலையம் சனிக்கிழமை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலப்புரம் மாவட்டத்தில் வீடு இடிந்து விபத்து நேரிட்டதில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மழைவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரையில் பலியானவர்கள் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே கடந்த மே மாதத்தில் இருந்து மழை தொடர்பான விபத்து சம்பவங்களில் 200 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை மைய அதிகாரி சேகர் லுகோஸ் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், மே மாதத்தில் இருந்து மழை காரணமாக 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், பலர் இடமின்றி தவிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.