பக்கங்கள்

பக்கங்கள்

11 செப்., 2018

இன்று இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்.. வரலாறு காணாத பாதுகாப்பு.


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் இன்று அவரது 61வது நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இம்மானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, அவருக்கு, அஞ்சலி செலுத்த பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் வருகை தர உள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மோப்ப நாய்கள் பிரிவு, வெடிகுண்டு சோதனை பிரிவு போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளன.

இதையொட்டி, பரமக்குடி முழுவதும் 75 கண்காணிப்பு காமிராக்கள், பொருத்தப்பட்டுள்ளன. மேலும் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் கண்காணிப்பு பணியில் ட்ரோன் காமிராக்கள் பறக்கவிடப்பட்டன. தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்டம் முழுக்க பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 3 ஐஜிக்கள், 5 டிஐஜிக்கள், 17 எஸ்.பிக்கள், 18 கூடுதல் எஸ்.பிக்கள், 45 டிஎஸ்பிக்கள் இந்த மண்டலங்களுக்கு பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இம்மானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு சிவகங்கையில் 5 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, திருபுவனம் ஆகிய தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று மாலை 4 மணி முதல் இன்று, நள்ளிரவு வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.