பக்கங்கள்

பக்கங்கள்

8 நவ., 2018

வடக்கு கிழக்கில் அடை மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வடக்கு கிழக்கில் நீடித்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் கடந்த ஒரு வாரத்திற்கும் அதிகமாக இயல்புக்கு மாறான காலநிலை காணப்படுகின்றது. இந் நிலையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் இன்று அடைமழை பெய்து வருகின்றது.
 
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைந்து காணப்பட்டதுடன் அரச த திணைக்களங்களின் அன்றாடச் செயற்பாடு மற்றும் பல்வேறு தொழில்துறை சார்ந்த நடவடிக்கைகளிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்சியாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை 499 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முஹம்மத் றியாஸ் கூறியுள்ளார்.
 
அத்துடன் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 499 குடும்பங்களைச் சேர்ந்த 1706 இடம்பெயர்ந்து 5 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஊரியன்கட்டு, கட்டுமுறிவு, அம்பந்தாவெளி வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் நாசிவன் தீவு ஆகிய கிராமங்களிலிருந்தே மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை வெள்ளம் காரணமாக கிரான் – புலிபாய்ந்தகல் தரைவழிப் பாதை துண்டிக்கபட்டுள்ளதாகவும் கிரான் – தொப்பிகல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியதால் ஐந்து கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 1500 குடும்பங்களின் தரைவழிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, கிளிநொச்சியில் இரணைமடு குளத்தின் நீரின் அளவு உயர்ந்துள்ளமை காரணமாக வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் வன்னியில் உள்ள அக்கராயன்குளம், முறிப்புக் குளம் முதலியவற்றின் நீர் நிலைகளும் உயர்ந்துள்ளதாக நீர்பபாசன திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சியில் இன்று புதன் கிழமை ஆரம்பித்த அடை மழை தொடர்ந்து பொய்து வருகின்றமை காரணமாக வெள்ளப் பாதிப்புக்கள் ஏற்படலாம் என் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.