பக்கங்கள்

பக்கங்கள்

8 நவ., 2018

மக்கள் மஹிந்தவை விரும்பவில்லை நாம் எதிர்ப்பதும் அந்த ஆணைக்கே!

தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை விரும்பவில்லை. அனைத்துத் தமிழ் மக்களும் ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது
என்றே விரும்புகின்றார்கள். அத்துடன், அரசமைப்புக்கு முரணாக  – 19 ஆவது திருத்தத்துக்கு முரணாக – ஜனாதிபதி எடுத்த முடிவுக்கு எதிராகவும் நாட்டின் அரசமைப்பை மதிப்பவர்கள் என்ற ரீதியில் நாம் செயற்படவேண்டிய கடப்பாடு உள்ளது. ஆதலால் நாம் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்ப்பதாக முடிவெடுத்துள்ளோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்போக்கு தொடர்பாகவும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
நாட்டில் தற்போதைய சூழ்நிலை அரசமைப்புக்கு முரணாக ஜனாதிபதி மைத்திரி எடுத்த ஒரு முடிவால் ஏற்பட்டுள்ளது. ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி இரவு ஜனாதிபதியால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருந்தார். இந்த விடயம் எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 26 ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. அடுத்த அமர்வு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி என்று அறிவித்திருக்கையில் இவ்வாறான ஒரு மாற்றத்தை ஜனாதிபதி மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த தன்னிச்சையான செயற்பாடு அரசமைப்புக்கு முரணானது. முன்பு பிரதமரை மாற்றுகின்ற அல்லது நியமிக்கின்ற அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தது. 19 ஆவது திருத்தச் சட்டத்தை நாம் கொண்டுவந்தபோது அந்த அதிகாரம் அதிலிருந்து நீங்கப்பட்டுள்ளது. அரசமைப்புக்கு முரணான ஒரு செயற்பாட்டையே ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்.
சரி, புதிய பிரதமரை நியமித்திருந்தால், உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்பட்டு புதிய பிரதமர் தன்னுடைய பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்கவேண்டும். அதுவும் இடம்பெறவில்லை.
எமது தலைவர் சம்பந்தன், இந்த அரசமைப்புக்கு முரணான ஜனாதிபதியின் செயற்பாடு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி, மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க என அனைவருடனும் பேச்சு நடத்தியுள்ளார். அதன்பின் நாம் கலந்தாலோசித்து, எமது கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இந்த விடயம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தோம்.
அந்தக் கூட்டத்தில் நடுநிலைமை வகிப்பது தொடர்பாகவும் எமது சில உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர். ஆனால், எமது மக்கள் மஹிந்த வருவது தொடர்பில் சிறிதும்கூட விருப்பமில்லாமல் உள்ளனர். என்னிடம்கூட பலர் தொலைபேசியில் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலைப்பாட்டிலேயே கட்சித் தலைவர்களும் உள்ளனர். நடுநிலைமை வகிப்பதென்பது அநீதிக்குத் துணைபோவது போன்றதாகும். ஆகவே, மஹிந்த மீண்டும் வரக்கூடா|து என்றால் நாம் அவருக்கு எதிராகச் செயற்பட்டே ஆகவேண்டும்.
சர்வதேச நாடுகள் கூட மஹிந்தவை ஆதரிக்கவில்லை. ஒரு பிரதமர் தெரிவுசெய்யப்பட்டால் அனைத்து நாடுகளின் பிரதமர்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவிப்பார்கன். இதுதான் வழமை. ஆனால், மஹிந்தவுக்கு எந்த நாட்டுப் பிரதமர்களும் வாழ்த்துத் தெரிவிக்கவில்லை. நான் நினைக்கின்றேன் இலங்கையில் ஒரு பிரதமருக்கு எவரும் வாழ்த்துத் தெரிவிக்காதமை இதுதான் முதல் தடவை என்று. – என்றார்.