பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜன., 2019

சபரிமலை: காங்., எம்.பி.,க்கள் - சோனியா கருத்து வேறுபாடு

சபரிமலை விவகாரத்தில் காங்., தலைவர் ராகுல், அவரது தாயார் சோனியாவுக்கும் கேரள காங்., எம்.பி.,க்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்களுக்கு எதிராக போலீசார் எடுத்த நடவடிக்கை மற்றும் பெண்கள் வழிபாடு நடத்துவதற்கு முதல்வர் பினராயி விஜயன் மேற்கொண்ட முயற்சிகள் கேரளாவில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

பெரும்பாலான மக்களின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில், சபரிமலையில் பெண்கள் வழிபாடு நடத்துவதற்கு அம்மாநில காங்., கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பொதுமக்களுக்கு ஆதரவாக அம்மாநில காங்கிரசார் போராட விரும்புகின்றனர். இதனால், காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

சபரிமலை விவகாரத்தில் பொதுமக்களின் கருத்தை பிரதிபலிப்பதால், பா.ஜ., பலனைடைந்து விடும் என்று காங்கிரசார் கவலைப்படுகின்றனர். இதனாலேயே, சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக போராட விரும்புகின்றனர். டில்லியிலும் பார்லிமென்டில் போராட அனுமதிக்க வேண்டும் என சோனியாவிடம் காங்., எம்.பி.,க்கள் கேட்டுள்ளனர்.

கேரளாவில் 7 காங்., எம்.பி.,க்கள் உள்ளனர். சபரிமலையில், பெண்கள் அனுமதிக்கப்பட்டதை கண்டித்து கறுப்பு தினமாக அனுசரிக்க இவர்கள் விரும்பினர். இதற்காக, பார்லிமென்டிற்கு கையில் கறுப்பு பட்டை அணிந்து வந்தனர்.

கையில் கறுப்பு பட்டை அணிவதை சோனியா தடுத்துள்ளார். அதற்கு காங்., எம்.பி.,க்கள், ''நமது எதிர்ப்பை டில்லியிலும் காட்ட வேண்டும். இல்லை என்றால், கேரள மக்களின் ஆதரவை இழந்துவிடுவோம்'' என எம்.பி.,க்கள் கூறி உள்ளனர். இதனையடுத்தே, காஙகிரஸ் எம்.பி.,க்கள் கறுப்பு பட்டை அணிய அனுமதிக்கப்பட்டனர். ராகுலுக்கு நெருக்கமான கேரள எம்.பி.,யான வேணுகோபாலும் கையில் கறுப்பு பட்டை அணிந்து வந்திருந்தார்.

மாநில காங்., தலைவர் ரமேஷ் சென்னிதாலா, சபரிமலை விவகாரத்தில் உண்ணாவிரதம் இருந்ததை தொடர்ந்தே, நாங்களும் போராட துவங்கினோம் என அவர்கள் சோனியாவிடம் கூறியுள்ளனர்.

அதற்கு சோனியா, ''மாநில காங்கிரசார், கேரளாவில் போராட்டத்தை தொடரலாம். ஆனால், தேசிய அளவில் என வரும் போது, ராகுல் மற்றும் எனது கருத்துடன் ஒத்து போக வேண்டும் எனக் கூறியுள்ளார். ஏற்கனவே கேரள காங்கிரசை, பா.ஜ.,வின் 'பி டீம்' என முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன், சபரிமலைக்கு பெண்கள் செல்லும் விவகாரத்தில், தனது தனிப்பட்ட கருத்தும் கேரள காங்கிரசின் கருத்தும் வேறுபட்டு உள்ளதை ராகுல் ஒப்பு கொண்டார்.

சில நாட்களுக்கு முன் இது குறித்து ராகுல் கூறுகையில், அனைத்து ஆண்களும் பெண்களும் சமம். சபரிமலையில் அனைத்து பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. எனது கட்சி, கேரள மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் எனக் கூறியிருந்தார்.

கடந்த 2016ல், கன்னட நடிகையும், கர்நாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சருமான ஜெயமாலா, தனக்கு 27 வயதாகும் போது, சபரிமலை சன்னிதானத்தில் சென்று வழிபாடு நடத்தியதாக கூறினார். இது அப்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்ததை அவர் வரவேற்றார்.