பக்கங்கள்

பக்கங்கள்

10 பிப்., 2019

எனக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படுமானால் சாட்சியமளிக்கத் தயார் - சுகுணா

எனக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படுமானால் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணத்தால் நானும் றிபாயாவும் கடத்தப்பட்டமை, றிபாயா காணாமல் போகச் செய்யப்பட்டமை பற்றி நீதிமன்றில் சாட்சியமளிக்கத் தயாராகவுள்ளேன் என தெரிவித்துள்ளார் மட்டக்களப்பு அரசடியைச் சேர்ந்த செல்வி சுகுணா.

காத்தான்குடியைச் சேர்ந்த றிபாயா தனது தோழி சுகுணாவுடன் சேர்ந்து துவிச்சக்கரவண்டி ஒன்றை வாங்க 1988 இல் மட்டக்களப்பு நகருக்கு சென்றார். அச்சமயம் இரா. துரைரெட்ணத்தால் இவர்கள் இருவரும் விசாரணைக்கென கூட்டிச் செல்லப்பட்டனர். தமது வாகனத்தில் வருமாறு இரா. துரைரெட்ணம் பணித்தபோதும் நாங்கள் சைக்கிளில் வருகிறோம் என சுகுணாவும் நிபாயாவும் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். பணிமணைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது தொலைத்தொடர்புக் கருவியொன்றில் சுதந்திரப் பறவையைக் கொண்டுவந்துள்ளோம் என ஒருவர் வேறொருவருக்குகத் தகவல் சொல்வதை இருவரும் கேட்டுள்ளனர்.

அங்கு நடந்த மிகக் கொடூரமான சித்திரவதைகளின்போது சுகுணா மயங்கி விட்டார். றிபாயாவை நன்கு தெரிந்த சைக்கிள் கடைக்காரர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு பிரஜைகள் குழுத் தலைவர் வண.பிதா சந்திரா பெர்னாண்டோ இவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அது இந்திய இராணுவ காலமாகையால் அவர்கள் அறிவித்த ஊரடங்கு அமுலில் இருந்தது. எனினும் வண.பிதா தொடர்ந்து அழுத்தம் கொடுத்தமையால் குறிப்பிட்ட முகாமுக்கு வண.பிதாவையும் அழைத்துக் கொண்டு சென்றனர்.

மயக்க நிலையில் சுகுணா மட்டும் காணப்பட்டார். றிபாயவைப் பற்றிய தகவல் தெரியவில்லை. 10/10/2017அன்று வட, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் பொன். ராம் ராஜகாரியர் வெளியிட்ட தகவல் ஒன்றின் மூலமே பாலியல் வன்புணர்வின் பின்னர் றிபாயா கொன்று புதைக்கப்பபட்டார் என்பதை அறிய முடிந்தது.

றிபாயா - சுகுணா கைது செய்யப்பட்டமைப பற்றி இந்தியப் படையினரிடம் முறைப்பாடு செய்த வண.பிதா சந்திரா பெர்னாண்டோ 06 ஜூன் 1988 அன்று ஈ.பி.ஆர்.எல்.எவ்வினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மாதா தேவாலயத்தினுள் வைத்தே இவரைக் கொன்றனர். 1990 ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியதும் இராணுவ துணைப் படையாக விளங்கிய ராஸிக் குழுவில் அங்கம் வகித்த இரா. துரைரெட்ணம் மட்டக்களப்பு மண்ணில் மீண்டும் கால் பதித்தார்.

இதனால் சுகுணா மட்டக்களப்பு நகரை விட்டு வெளியேற நேர்ந்தது. தற்போது புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இவர் தனக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுமானால் றிபாயாவுக்கு நிகழ்ந்த அவலம் குறித்து நீதிமன்றில் சாட்சியமளிக்கத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொடூரங்களுக்குக் காரணமான இரா. துரைரெட்ணம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் மாநாட்டில் முன்வரிசையில் அமர்ந்திருந்தார். இம்மாநாட்டில் வரலாற்றுக் குறிப்பேடு என்று ஒரு சிறுநூலை வெளியிட்டனர். இதில் புலிகள் தம் மீது தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். எனினும் யாழ்ப்பாணத்தில் புலிகளின் முகாமுக்குப் பாதுகாப்பாக நின்ற சுரேன் (திருச்சிற்றம்பலம் சுரேந்திரன் - நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்) என்ற போராளியைச் சுட்டுக் கொன்றதில் ஆரம்பித்த படுகொலைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஈரோஸ் இயக்கத்தவரைக் கொன்றதைக்கூட மறந்து விட்டனர்.

றிபாயா மட்டுமல்லாது வண.பிதா சந்திர பெர்னாண்டோ, இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவர் வனசிங்கா (31.03.1989), அதிபர் கனகரத்தினம் (13,05,1988) அதிபர் கணபதிப்பிள்ளை (ஆரையம்பதி), கிராம சேவை அலுவலர் தேவிசுதன் (கொம்மாந்துறை) ஆகியோர் ஈ.பி.ஆர்.எல்.எவ்வினரால் சுட்டுக்கொல்லப்பட்டமை பற்றி எந்த விசாரணையும் நடந்ததாகத் தெரியவில்லை. களுதாவளையில் முத்துலிங்கம் என்பவரைக் கொன்றுவிட்டு அவரது சடலைத்தை வாகனத்தில் கட்டியிழுத்தனர்.

இதேபோல ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்ட தம்பி கொழும்பில் நாடகத்தின் இயக்குநரும் பிரபல நடிகரும் சிரித்திரன் முதலான பத்திரிகைகளில் நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதியவருமான குமார், தனபால் முதலானோர் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டமை பற்றிய விவரங்கள் அடங்கிய பட்டியில் மிக நீண்டது.

இதில் அசோகா ஹோட்டல் படுகொலைகளும் குறிப்பிடத்தக்கவை. யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சமயம் ஈ.பி.ஆர்.எல்.எவ்வினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கண்ணன் (குலசேகரம் நாகேந்திரன் - கணேசபுரம், கிளிநொச்சி), ராசா (சிறாம்பியடி, யாழ்ப்பாணம்) முரசொலி பத்திரிகை ஆசிரியர் திருச்சிற்றம்பலத்தின் ஒரே மகன் அகிலன், பொருளியல் ஆசிரியர் கிருஸ்ணா ஆகியோரின் படுகொலைகளும் யாழ். கல்வி சமூகத்தை அதிர வைத்தது.

அரசியலுக்குப் புதியவரான முன்னாள் முதல்வர், சுரேஸ் பிறேமச்சந்திரனின் சூழ்ச்சிக்குப் பலியாகிவிட்டமை ஏமாற்றமளிக்கிறது. ஒரு கட்சியின் மாநாடு என்று அழைக்கப்பட்டால் அதற்குரிய அளவில் மட்டுமே அவரது பங்குபற்றுதல் இருந்திருக்க வேண்டும். தமக்கு வெள்ளையடிக்க முன்னாள் முதல்வரை பகடைக் காயாக்கியது சரியான செயலன்று.

றிபாயா - சுகுணா சித்திரவதைக்குள்ளான வாவிக்கரை முகாம் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பணியகமாக மாறியது. மீண்டும் ஈ.பி.ஆர்.எல்.எவ். பணிமனையாக இப்போது காட்சியளிக்கிறது. இந்த முகாமில்தான் கடந்த வருடம் மே தின நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சி செயலர் கி.துரைராஜசிங்கம் கலந்து கொண்டார்.

மே நாள் தொழிலாளருக்கானது அதில் கட்சி பேதமின்றி கலந்து கொள்வது தவறல்ல எனினும் இந்த இடத்தில் நிகழ்ந்த பாலியல் வல்லுறவு, சித்திரவதைகள், படுகொலைகள் என்பவற்றை நினைத்திருந்தால் இந்நிகழ்வை வேறு இடத்தில் நடத்துமாறு கட்சிச் செயலர் கோரியிருக்கலாம்