பக்கங்கள்

பக்கங்கள்

6 மார்., 2019

வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த வீரர்களின் சமர்


சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் ஆதிக்கத்தின் கீழ் போட்டி இருந்தாலும், இரண்டாம் இனிங்ஸில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணியினர், மிகவும் பொறுப்புமிக்க துடுப்பாட்டத்தை மேற்கொண்டு, வீரர்களின் சமர் கிரிக்கெட் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்தனர்.

வீரர்களின் சமர் என வர்ணிக்கப்படும் மகாஜனாக் கல்லூரி அணிக்கும் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணிக்கும் இடையிலான 19ஆவது கிரிக்கெட் போட்டி, ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் நேற்று முந்தினம் ஆரம்பமாகியது.

இரண்டு நாட்களைக் கொண்ட இந்தப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஸ்கந்தவரோதயக் கல்லூரி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதற்கிணங்க, முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மகாஜனாக் கல்லூரி, தமது முதலாவது இனிங்ஸில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், கே. கிருசன் 31, எஸ். வரலக்ஸன் 25 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், எஸ். டான்ஸன் 4, எஸ். டிலக்ஸன், எஸ். அமிர்தசரதன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதயக் கல்லூரி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 248 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில், டிலுக்ஸன் 51, எஸ். டான்சன் 29, ஜே. கலிஸ்ரன் 28, எஸ். பிரசான் 25, டக்ஸன் ஆட்டமிழக்காமல் 21, சோபிதன் 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில், ஆர். சுஜன், சதுர்ஜன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

104 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடக் களமிங்கிய மகாஜனாக் கல்லூரி, இனிங்ஸ் தோல்வியை தவிர்க்க மிகவும் பொறுமையாக விளையாடியது. ஸ்கந்தா அணியின் பந்துவீச்சாளர்களின் ஆக்கிரோசமான பந்துவீச்சின் முன்னால், இரண்டாம் நாள் முடிவு வரையிலும் மகாஜனாக் கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்கள் நின்று நிதானித்து, போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்தனர்.

இரண்டாவதும், இறுதியுமான நாள் முடிவில் மகாஜனாக் கல்லூரி அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில், கே. கிருசன் 24, எஸ். சிலக்சன் 24, யு. மதீசன் 21, ஆர். சுஜன் 19 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஏ. தனுஸன் 4, எஸ். டான்ஸன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இவ்வாண்டு வீரர்களின் சமரின் நாயகன், சிறந்த துடுப்பாட்ட வீரராக ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் டான்சனும், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த சகலதுறை வீரராக அதே கல்லூரியின் சிலக்சனும், சிறந்த களத்தடுப்பாளராக மகாஜனாக் கல்லூரியின் கிருசனும் தெரிவாகினர்.