பக்கங்கள்

பக்கங்கள்

17 மே, 2019

சஹ்ரான் பயிற்சிபெற்ற ’அருப்பல’ முகாம் கண்டுபிடிப்பு!



கொழும்பு, ஷங்கரில்லா விடுதியில் தற்கொலைத் தாக்குதல்
நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான மொஹமட் சஹ்ரான் பயிற்பெற்றதாகக் கூறப்படும் பயிற்சி முகாமொன்று, கண்டி, அருப்பல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பிரதேசத்தில் முப்படையினர் மற்றும் காவல் துறை  இணைந்து கடந்த பல நாள்களாக தொடர்ச்சியாக மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பயனாக, மேற்படி முகாம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கண்டி, அருப்பல தர்மாசோக மாவத்தையிலுள்ள இரண்டு மாடிகளைக் கொண்ட வீடொன்றே, பயிற்சி முகாமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வீட்டைச் சுற்றி மதில் அமைக்கப்பட்டுள்ளதென்றும் வீட்டினுள் பாரிய கராஜ் ஒன்று காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆயுததாரிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் புத்தகங்கள், விரிவுரைகளை நடத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் பொருகள்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
வியாபார நடவடிக்கைக்காக இந்த வீடு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் வீட்டுக்கு வந்து சென்றவர்களின் பெயர் விவரங்கள் அடங்கிய தகவல் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே, இவ்வீடு ஆயுததாரிகளின் பயிற்சி முகாமாக பயன்படுத்தப்பட்டுள்ளதென்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கண்டியில் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட பலர், புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் இந்தப் பயிற்சி முகாம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தன