பக்கங்கள்

பக்கங்கள்

7 அக்., 2019



சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் குறித்த பெயர் பட்டியல், கணக்கு எண், பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை முதன்முதலாக மத்திய அரசிடம் வழங்கியது சுவிட்சர்லாந்து அரசு.

கறுப்புப் பணத்தை தடுக்கும் வகையில், இந்தியா, ஸ்விட்சர்லாந்து அரசுகளுக்கு இடையே தாமாக முன்வந்து கணக்கு விவரங்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் கையொப்பம் ஆனபின் மத்திய அரசுக்கு கிடைத்துள்ள முதல் பட்டியல் இதுவாகும்.
அடுத்த பட்டியல் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-வது பட்டியல் கிடைக்கும்.
வரி ஏய்பாளர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் சுவிட்சர்லாந்தில் ஏராளமான இந்தியர்கள் வரிஏய்ப்பு செய்து கறுப்பு பணத்தை பதுக்கியுள்ளார்கள்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன், கறுப்புப் பணத்தை ஒழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது. அதன்படி, வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்கவும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது. இதற்காக சர்வதேச உதவியையும் மத்திய அரசு நாடியது.

அதன் ஒரு பகுதியாக சுவிட்சர்லாந்து நாட்டின் உதவியுடன் அந்நாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் குறித்த பெயர் பட்டியலை பகிர்ந்து கொள்வது தொடர்பாக அந்நாட்டுடன் பிரதமர் மோடி ஒப்பந்தம் செய்தார்.
இதன்படி முதல்கட்ட விவரங்களை மத்திய அரசிடம் பகிர்ந்து கொள்வது தொடர்பாக பேச்சு நடத்த கடந்த ஆகஸ்ட் மாதம் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒருகுழு இந்தியாவந்து சென்றது.
அந்த குழுவினர் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் மூத்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கிவைத்துள்ள கறுப்பு பண விவரங்களை எவ்வாறு மேம்பட்ட முறையில் பகிர்ந்து கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தசூழலில் இன்று சுவிட்சர்லாந்து அரசு ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்களை முதல்முறையாக அளித்துள்ளது.
இதுகுறித்துசுவிட்சர்லாந்து வரி நிர்வாகத்துறையின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், " இந்தியா உள்ளிட்ட 75 நாடுகளுடன் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு நிதி கணக்குகள், தகவல்களை ஸ்விட்சர்லாந்து வரிகள் நிர்வாக அமைப்பு பகிர்ந்துள்ளது. இந்த தகவல்கள் பரிமாற்ற விவரங்கள் முழுமையாக ரகசியமானவை" எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த முதல் பட்டியலில் இருக்கும் இந்தியர்கள் பெயர்கள், அவர்களின் தொழில்கள், வங்கிக்கணக்கு எண், பரிமாற்ற விவரங்கள், முகவரி, வாழுமிடம், மாநிலம், வரிசெலுத்தும் எண், வருமானம், வங்கி்க் கணக்கு இருப்பு, வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட பணம், டெபாசிட் செய்த பணம் உள்ளிட்ட விவரங்கள் இருக்கின்றன. ஆனால் இதை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இதுவரை 31 லட்சம் வங்கிக்கணக்குகள் தொடர்பான விவரங்களை ஸ்விட்சர்லாந்து அரசு 75 நாடுகளுக்கு அனுப்பியுள்ளது. அவர்களிடம் இருந்து 24 லட்சம் விவரங்களை பெற்றுள்ளது.

இந்த விவரங்களை மத்திய அரசு பெற்று இருப்பதன் மூலம், கறுப்பு பணம் தொடர்பான வழக்குகள், வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளவர்கள், கணக்கில் வராத சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும். இனிவரும் காலங்களில் வரி ஏய்ப்பு செய்து கறுப்புபணம் பதுக்கியோர் மீதான நடவடிக்கையும் தீவிரமாகும்.
இந்த பட்டியலில் பெரும் தொழிலதிபர்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் ஆகியோர் அதிகமாக உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.