பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2020

அனைத்து கனேடிய மாகாணங்களுக்கும் பரவியது கொரோனா வைரஸ்

கனடாவின் பத்து மாகாணங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவிவிட்டதாக கனடாவின் தலைமை சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.

கடைசியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அட்லாண்டிக் கடற்கரை பகுதி மாகாணங்கள். பெரும் மெட்ரோபொலிட்டன் மையங்களான ரொரன்றோ, மொன்றியல் மற்றும் வான்கூவர் ஆகிய பகுதிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ள கனடாவின் தலைமை சுகாதார அலுவலரான Theresa Tam, கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வாய்ப்பு வேகமாக குறைந்துகொண்டே வருவதாக தெரிவித்தார்.


பயணங்களை குறைத்தல், வெளிநாட்டிலிருந்து திரும்பினால் 14 நாட்களுக்கு தங்களைத் தாங்களே தனிமைப்படுத்துதல், பெருங்கூட்டமாக கூடுவதைத் தவிர்த்தல், முடிந்தவரை வீடுகளிலிருந்தே வேலை பார்த்தல் போன்ற நடவடிக்கைகளை வரும் வாரங்களில் பின்பற்றுமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கனடாவில் சுமார் 25,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதோடு, ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மொத்த கனேடிய மாகாணங்களிலும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 313 ஆகியுள்ளது.