பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜூன், 2020

தமிழர் ஒற்றுமையை சீர் குலைக்க நினைக்கும் பலர் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுவார்கள்

கூட்டமைப்புக்கும் மக்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்துபவர்கள் அரசின் முகவர்களா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது என வைத்தியகலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

தமிழர் ஒற்றுமையை சீர் குலைக்க நினைக்கும் பலர் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், “தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து கட்சிகளாக பிரிந்தும் சுயேட்சைக்குழுக்களாகவும் தேர்தலில் போட்டியிடுகின்றவர்களுக்கு தமிழ் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.

அவர்கள் கட்டுப்பணத்தைக் கூட திரும்பப் பெற முடியாத அளவு மக்களால் நிராகரிக்கப்படுவார்கள்.

தமிம் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் பதவி மோகத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் மக்களுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

அரசு செய்ய வேண்டிய வேலையை தமிழராக இருந்து கொண்டு இவர்கள் செய்வதால் இவர்கள் சிங்கள அரசின் நேரடி முகவர்களா என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது.

வன்னியில் 6 ஆசனத்திற்காக 30 சுயேற்சைக் குழுக்களும் 400 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள்.

இதில் கணிசமானவர்கள் அரசின் கைப்பொம்மைகளாக உள்ளவர்கள் வெற்றி பெற மாட்டோம் என்று தெரிந்தும் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதே இவர்களது நோக்கம்.

இவர்களது சித்து விளையாட்டுக்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு நன்கறியும். இவர்களது எண்ணங்கள் ஒரு போதும் பலிக்கப்பபோவதில்லை.

நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களை கைப்பற்றும்.

தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து தமிழர் ஒற்றுமையை சீர் குலைக்க நினைக்கும் பலர் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுவார்கள்” என தெரிவித்தார்www.pungudutivuswiss.com