பக்கங்கள்

பக்கங்கள்

14 அக்., 2020

அரச அதிபருடன் தமிழ்தேசியகூட்டமைப்பு குழு சந்திப்பு!!

Jaffna Editor
மட்டக்களப்புமாவட்ட அரச அதிபருடன் தமிழ்தேசியகூட்டமைப்பு குழு நேற்­று(13/10/2020) மு.ப 9.30, மணிக்கு சந்திப்பு ஒன்றை நடத்தினர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறி மயிலந்தமடு, மாதவனை பகுதிகளில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட கால்நடைகளுக்கான மேச்சல் தரைகளை வெளிமாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களும் புத்த பிக்குகள் சிலரும் அபகரிப்பதை் தடுப்பது தொடர்பாக இன்று நேரடியாக சென்று ஆட்சேபனைகளை தெரிவித்தனர்.
இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொ.செல்வராசா தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், மாநகர முதல்வர் தி.சரவணபவன், ஓய்வுநிலை காணி ஆணையாளர் க.குருநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட அரச அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவுடன் காணி விடயங்களுக்கான மேலதிக அரச அதிபர் திருமதி நவரஞ்சினி முரளிதரன், கிரான் பிரதேச செயலாளர் எஷ் .ராஜ்பாபு, செங்கலடி பிரதேச செயலாளர் கே.வில்வரெட்ணம், மாவட்ட காணி அதிகாரி ஆகியோர் சமூகம் அளித்திருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அரச அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தான் நேரடியாக நேற்று (12/10/2020) சம்மந்தப்பட்ட மயிலந்தனை மாதவனை பிரதேசத்துக்கு சென்று பார்வையிட்டதாகவும் அங்கு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் சிறு காடுகளை வெட்டி சேனைப்பயிர்செய்கைக்காகவும் பெருமளவிலான ஏக்கர் காணிகளில் அந்த பிரதேசத்தில் அத்துமீறி வேலைகளை முன்னெடுப்பதை தாம் நேரடியாக கண்ணுற்றதாகவும்.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட மகாவலி அபிவிருத்தி சபையின் பணிப்பாளருடன் தாம் கதைத்து உடனடியாக அந்த வெளிமாவட்ட பயிர்செய்கையாளர்களை வெளியேற்றும்படி கேட்டதாகவும் அதனை சம்மந்தப்பட்ட மகாவலி அபிவிருத்தி சபை பணிப்பாளர்,சம்மந்தப்பட்ட அமைச்சின் செயலாளருடன் தொடர்புகொண்டு கதைத்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதாவும் அரச அதிபர் தமிழ் தேசிய கூட்டமைப்பு குழுவிடம் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கால்நடை பண்ணையாளர்களின் கால்நடைகளுக்கு காலம் காலமாக மயிலத்தமடு, மாதவனை பிரதேசம் உள்ளது. அங்கு வெளிமாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் சேனைப்பயிர் செய்வதால் அங்கு மாடுகளை கொண்டு செல்ல முடியாத நிலையும் பண்ணையாளர்களுக்கும் பெரும்பான்மை இன அத்துமீறிய பயிர்செய்கையாளருக்கும் இனமுறுகல் நிலை ஏற்படுவதுடன் கடந்த காலங்களில் பல சம்பவங்கள் இடம்பெற்றதையும் சுட்டிக்காட்டியதுடன் இந்த விடயத்தை எக்காரணம் கொண்டும் நாம் அனுமதிக்க விடமாட்டோம் என எடுத்து கூறினர்.
அதேவேளை இலங்கை அரசின் காணி வழங்கல் சட்டத்தின் பிரகாரம் எந்த ஒரு அரச காணியோ அல்லது மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான காணியோ அல்லது வன இலாகாவுக்கு சொந்தமான காணியோ குத்தகைக்கு வழங்குவதாக இருந்தால் அந்த பிரதேச மக்கள் அல்லது அந்த மாவட்ட மக்களுக்கே வழங்கவேண்டும்.
அப்படி இருக்கும்போது நினைத்தபடி வெளிமாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வழங்கப்பட்டது எந்த ஒரு அடிப்படையிலும் ஏற்கமுடியாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் கடந்த ஆட்சிக்காலத்திலும் இதை தடுத்தோம். தற்போது மாவட்ட அரச அதிபர் என்ற ரீதியில் இதை தடுக்க தாங்கள் எடுக்கும் முயற்சிக்கு எமது கட்சி பூரண ஒத்துழைப்புகளை வழங்கும்.
இந்த விடயம் தொடர்பாக நாம் ஏற்கனவே எமது கட்சி எடுத்த தீர்மானத்தின்படி முதலாவதாக மாவட்ட அரச அதிபரை சந்தித்தோம் நாளை (14/10/2020) திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநருடனும் இந்த விடயத்தை நேரடியாக எடுத்து கூறவுள்ளோம் என அந்தசந்திப்பின்போது தெரிவித்தனர்.
மாவட்ட அரச அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தாம் இந்த விடயத்தில் கூடிய அக்கறையுடன் இதனை தடுப்பதற்கான சகல முயற்சிகளையும் முன்னெடுப்பதாக உறுதியளித்தார்
இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு குழு நாளை கிழக்கு மாகாண ஆளுநரை சந்திப்பற்கு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.