பக்கங்கள்

பக்கங்கள்

13 நவ., 2020

பிரித்தானியாவில் தடை நீங்கியதாக நம்பி ‘தமிழ்ப் புலிகள்’ என்று வாகனத்தில் வாசகம் ஒட்டிய தமிழருக்கு காவல்துறை எச்சரிக்கை!

 தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கி விட்டதாக நம்பித் தனது வாகனத்தில் ‘தமிழப் புலிகள்’ என்று வாசகம் ஒட்டியிருந்த தமிழர் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.
 

இங்கிலாந்தின் மத்திய பிராந்தியமான நோத்தாம்ப்ரன் (Northampton) பகுதியூடாக இன்று முற்பகல் பயணித்த தமிழர் இளைஞர் ஒருவரே இவ்வாறு காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது.

 

இங்கிலாந்தில் கொரோனா முடக்கநிலை அமுலில் நிலையில், நோர்த்தாம்ப்ரன் பகுதியில் வழமையான வீதித் தடுப்புச் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினரால் குறித்த இளைஞர் வழிமறிக்கப்பட்டுள்ளார்.

 

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கி விட்டதாக 21.10.2020 அன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கும்பல் விடுத்த அறிவித்தலை நம்பித் தனது வாகனத்தில் ‘Tamil Tigers’ (தமிழ்ப் புலிகள்) என்ற வாசகத்தைக் கொட்டை எழுத்தில் குறித்த இளைஞர் ஒட்டியிருந்தார்.

 

இந்நிலையில் இது தடை செய்யப்பட்ட அமைப்பொன்றின் பெயர் என்று குறித்த இளைஞரிடம் தெரிவித்த காவல்துறையினர், அவரைத் தமது வாகனத்திற்குள் ஏற்றி அவரது விபரங்களைப் பதிவு செய்ததோடு, அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரா? அல்லது ஆதரவாளரா? என்று 30 நிமிடங்களுக்கு மேலாக விசாரணை செய்துள்ளனர்.

 

அத்துடன் அவருக்கு எதிராக அடுத்த கட்டமாக எடுக்கப்படக் கூடிய குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து விரைவில் காவல்துறைப் பணிமனையில் இருந்து தொடர்பு கொள்ளப்படும் என்று தெரிவித்த காவல்துறையினர், அவரது வாகனத்தில் பொறிக்கப்பட்டிருந்த ‘தமிழ்ப் புலிகள்’ என்ற வாசகத்தைக் கிழித்தெடுத்த பின்னரே அவரை மேற்கொண்டு பயணிக்க அனுமதித்துள்ளனர்.

 

எனினும் அவரது வாகனத்தின் பின்புறத்தில் பறந்து கொண்டிருந்த தமிழீழ தேசியக் கொடியைக் காவல்துறையினர் அகற்றவில்லை என்றும், அது அப்படியே இருக்க அவரை மேற்கொண்டு பயணிக்க அனுமதித்ததாகவும் தெரிய வருகிறது.

 

28.02.2001 அன்று பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை கொண்டு வரப்பட்டதை அடுத்துத் தனது வாகனத்தில் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ என்ற வாசகத்தைப் பொறித்திருந்த இலண்டன் ஸ்ரன்மோர்  (Stanmore) பகுதியைச் சேர்ந்த பொன்னையா சபேசன் என்ற இளைஞர் இதே பாணியில் 22.11.2001 அன்று பிரான்சில் இருந்து பிரித்தானியா வரும் பொழுது காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதோடு, பின்னர் அவருக்கு நீதிமன்றத்தால் ஆயிரம் பவுண்ஸ் தண்டப் பணம் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.