பக்கங்கள்

பக்கங்கள்

13 டிச., 2021

இலங்கை வருகிறார் ஐ.நா. உதவி பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா

www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளருமான கன்னி விக்னராஜா 5 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை இலங்கை வருகின்றார்.

இவ்விஜயத்தின்போது, காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 'கோப் 26' மாநாடு அண்மையில் நிறைவடைந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் உதவியுடன் முன்னெடுக்கக்கூடிய புத்தாக்கங்கள், நாடு (இலங்கை) முன்னுரிமையளிக்கும் விடயங்கள், கொவிட் - 19 வைரஸ் பரவலின் பின்னரான சமூக மற்றும் பொருளாதார மீட்சி, நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கக்கூடிய மேலதிக நிதியுதவி ஆகிய விடயங்கள் தொடர்பில் ஐ.நாவின் உதவி பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா விசேட அவதானம் செலுத்தவுள்ளார்.

மேலும் நாட்டின் மனிதவள அபிவிருத்தி, கொவிட் - 19 வைரஸ் பரவலினால் சமூக - பொருளாதார ரீதியில் ஏற்பட்ட தாக்கங்களுக்கு மத்தியில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் இவ்விஜயத்தின்போது கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைவரும் கன்னி விக்னராஜா நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை மேற்கொள்ளவிருப்பதுடன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் அனுசரணையுடன் நாட்டின் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளையும் பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.