பக்கங்கள்

பக்கங்கள்

15 அக்., 2022

த்ரில் வெற்றியுடன் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி

www.pungudutivuswiss.com
இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண T20 தொடரின் அரையிறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஒரு ஓட்டத்தினால் த்ரில் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் தடவையாக தெரிவாகியிருப்பதோடு, தொடரின் இறுதிப் போட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை (15) இந்திய மகளிர் வீராங்கனைகளை எதிர்கொள்கின்றது.

>> இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் மகளிர் வெற்றி

இரு அணிகளும் மோதிய தீர்மானம் கொண்ட அரையிறுதிப் போட்டியானது இன்று (13) பங்களாதேஷின் சில்லேட் அரங்கில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் வீராங்கனைகள் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்ததோடு 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்கள் எடுத்தனர்.

இலங்கை மகளிர் அணி துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக ஹர்சித மாதவி 35 ஓட்டங்கள் எடுக்க, அனுஷ்கா சஞ்சீவனி ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 26 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் பாகிஸ்தான் பந்துவீச்சு சார்பில் நஷ்ரா சந்து 3 விக்கெட்டுக்களையும், அய்மன் அன்வர், நிதா தர் மற்றும் சதியா இக்பால் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 123 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் மகளிர் அணி இறுதி வரை வெற்றிக்காக போராடிய போதும் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதனால் ஒரு ஓட்டத்தின் அடிப்படையில் அவ்வணி தோல்வியினைப் பதிவு செய்ய இலங்கை மகளிர் அணி அரையிறுதியில் த்ரில் வெற்றி பெற்றது.

>> T20 உலகக் கிண்ணத்துக்கான தென்னாபிரிக்க அணியில் புதிய வீரர்

பாகிஸ்தான் மகளிர் அணி துடுப்பாட்டத்தில் அதன் தலைவி வெற்றிக்காக போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 41 பந்துகளுக்கு 4 பௌண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்கள் பெற்ற போதும் அவரின் துடுப்பாட்டம் வீணானது.

இலங்கை மகளிர் அணி பந்துவீச்சில் இனோக்க ரணவீர 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், கவிஷா டில்ஹாரி மற்றும் சுகந்திக்கா குமாரி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியும் தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகியாக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை இனோக்க ரணவீர தெரிவாகினார்.