பக்கங்கள்

பக்கங்கள்

27 டிச., 2022

பருத்தித்துறை நகர சபை புதிய தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு!

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் -பருத்தித்துறை நகரசபையின் புதிய தவிசாளர் தெரிவு கோரம் இன்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் -பருத்தித்துறை நகரசபையின் புதிய தவிசாளர் தெரிவு கோரம் இன்மையால் ஒத்திவைக்கப்பட்டது


பருத்தித்துறை நகரசபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கால் தோற்கடிக்கப்பட்ட நிலையில், கடந்த 19ஆம் திகதி மீண்டும் வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை தவிசாளர் யோ. இருதயராஜா தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

இன்று வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் தலைமையில் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெறுவதற்கான கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னாள் தவிசாளர் உட்பட நால்வரும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் ஒருவருமாக ஐவர் சமூகமளித்திருந்தனர். பின் உள்ளூராட்சி ஆணையாளரால் மேலதிகமாக அரை மணிநேரம் வழங்கப்பட்டது. சற்று நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் மதனி நெல்சன், சுயேட்சை குழு உறுப்பினர் துலோசனா ஆகியோர் சமூகமளித்தனர்.

15 உறுப்பினர்களைக் கொண்ட பருத்தித்துறை நகரசபையில் எட்டு பேர் கூட்டம் ஒன்று நடத்துவதற்கு சமூகம் அளிக்க வேண்டும். ஆனால் ஏழு பேர் மட்டுமே சமூகமளித்திருந்த நிலையில் ஒரு கோரம் இன்மையால் புதிய தவிசாளர் தெரிவு ஒத்திவைக்கப்படுவதாக வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

புதிய தவிசாளர் தெரிவு பிறிதொரு தினத்தில் அறிவிக்கப்படும் என்றும் கூறி கூட்டத்தை அவர் நிறைவு செய்துள்ளார்.

இன்றைய தவிசாளர் தெரிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் ஆறு பேரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இருவருமாக எட்டு பேர் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.