பக்கங்கள்

பக்கங்கள்

1 ஜூன், 2023

முன்னாள் போராளிகளின் வாழ்வில் விளையாட முனையும் த.தே.ம.முன்னணியிடம் சில கேள்விகள்

www.pungudutivuswiss.com
தமிழ் இனத்தின் விடுதலைக்காகப் போராடி தமது அவயவங்களை இழந்து 
தவிக்கும் முன்னாள் போராளிகளுக்கு யாருமே உதவக் கூடாது, புலம்பெயர்
 தமிழர்கள் எவருமே அவர்கள் பற்றி வாயே திறக்கக்கூடாது என்று கடும் தொனியில் எச்சரித்துள்ளது த.தே.ம. முன்னணி.

புலம்பெயர் ஊடகம் ஒன்று நடாத்திய இணையவழிக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசுகின்ற பொதே த.தே.ம.முன்னணியின் பிரமுகரும், ஊடகப் பேச்சாளருமான என்.காண்டீபன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

வடக்கு கிழக்கில் தமது அவயவங்களை இழந்த முன்னாள்போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்கள் போன்றனவற்றிற்கு புலம்பெயர் உறவுகளிடம் இருந்து உதவிகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சிகளைச் செய்துவருகின்ற ஊடகங்களுக்கு அவர் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்ததுடன், அவர்களது அவலங்களையோ அந்த முன்னாள் போராளிகள் படுகின்ற வேதனைகளையோ புலம்பெயர் மக்களிம் காண்பிக்கக்கூடாது என்றும் காண்டீபன் குறிப்பிட்டிருந்தார்.

போராளிகள் உண்மையிலேயே எதிர்கொண்டுவருகின்ற கஷ்டங்களை ஊடகங்கள் புலம்பெயர் தமிழர்களிடம் காண்பித்தால், ‘தமிழ் மக்களுக்காகப் போராடினால் இதுதான் கதி’ என்று புலம்பெயர் மக்கள் நினைத்துவிடுவார்களாம்.

அதனால்தான் வடக்குக் கிழக்கில் முன்னாள் போராளிகளோ அவர்களது குடும்பங்களோ அல்லது மாவீரர் குடும்பங்களோ பட்டுவருகின்ற வலிகளையும், வேதனைகளையும் உள்ளார் ஊடகங்கள் புலம்பெயர் உறவுகளுக்கு காண்பிக்கக்கூடாது என்று அவர் கோபத்துடன் மிரட்டல்விடுத்திருந்தார்.

காண்டீபனின் அந்தக் கூற்று தொர்பாக சில கேள்விகளை த.தே.ம.முன்னணியிடம் முன்வைக்க விரும்புகின்றோம்:

முன்னாள்போராளிகளுக்கு புலம்பெயர் மக்கள் உதவக்கூடாது என்பது அல்லது போராளிகளின் வலிகள் வேதனைகள் உலகத் தமிழ் உறவுகளுக்கு தெரியக்கூடாது என்பது காண்டீபனின் தனிப்பட்ட நிலைப்பாடா அல்லது அது த.தே.ம.முன்னணியின் நிலைப்பாடா?
முன்னாள் போராளிகளின் உண்மையான நிலையை ஊடகங்கள் வெளி உலகிற்கு- குறிப்பாக புலம்பெயர் உறவுகளுக்கு கூறுவதை ஏன் த.தே.ம.முன்னணி விரும்பவில்லை?
முன்னாள் போராளிகளின் கஷ்டங்களை ஊடகங்கள் அப்படியே காண்பித்தால், போராளிகளை போசிப்பதற்காக என்று கடந்த 13 வருடங்களாக புலம்பெயர் தேசங்களில் சேகரித்த பணம் எங்கே என்ற கேள்வியை புலம்பெயர் மக்கள் கேட்டுவிவார்கள் என்பதுதான் காண்டீபனின் பயமா?
மாற்றுவலுவுள்ள முன்னாள் போராளிகளுக்கு புலம்பெயர் உறவுகள் உதவி செய்வது த.தே.ம.முன்னணிக்கு பிடிக்கவில்லையா?
தமிழ் மக்களின் விடிவுக்காகப் போராடிய எமது மறவர்கள் அவலங்களின் அடையாளமாக இருக்கவேண்டும் என்பதுதான் உங்களது கட்சியின் விரும்பமா?
முன்னாள் போராளிகள் ஏன் மற்றைய தமிழர்களைப் போன்று சகஜமான ஒரு வாழ்வை வாழக்கூடாது?
த.தே.ம.முன்னணி ஏன் அதனை விரும்பவில்லை?
நீங்கள் ஏன் அதற்கு முற்றுக்கட்டை போடுகின்றீர்கள்?
‘பிச்சைக்காரனின் புண்’ போன்று நீங்கள் மல்லினப்பட்ட அரசியல் செய்வதற்கு தமிழ் மக்களின் அவலம் தொடர்ந்து உங்களுக்கு தேவைப்பட்டுக்கொண்டே இருக்கின்றதா?
தமிழ் இனத்தின் விடிவுக்காகப் போராடியவர்களின் நிலைகளை புலம்பெயர் உறவுகளுக்கு எடுத்துக்கூறவேண்டியது தமிழ் ஊடகங்கள் ஒவ்வொன்றினதும் கடமை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா?
ஊடகங்களின் கடமையை த.தே.ம.முன்னணி தடுப்பது ஏன்?