பக்கங்கள்

பக்கங்கள்

14 ஆக., 2025

www.pungudutivuswiss.com
செம்மணி புதைகுழி ஸ்கான் அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும்!
[Thursday 2025-08-14 07:00]


யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஸ்கேன் ஆய்வு தொடர்பான அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஸ்கேன் ஆய்வு தொடர்பான அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின், இரண்டாவது அமர்வில் மீட்கப்பட்ட தடயப் பொருட்கள் மற்றும் என்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பான அறிக்கையும் இன்றைய தினம் மன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுப் பணிக்கான திகதியை நீதிமன்றத்திடம் இன்று பெற்றுக் கொள்ளவுள்ளதாகப் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன், தெரிவித்தார்.

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை 45 நாட்கள் நடத்துவதற்கு முன்னதாக நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. அதற்கமைய மூன்று அமர்வுகளாக முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்ட அகழ்வுப் பணிகளில் இரண்டு அமர்வுகள் நிறைவடைந்துள்ளன.

இரண்டாம் கட்டத்தின் இரண்டாவது அமர்வு அகழ்வுப் பணிகளின் நிறைவில் 140 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் சிறார்களின் என்புக்கூட்டுத் தொகுதிகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சிறார்களின் ஆடைகள், பொம்மைகள், காலணிகள், புத்தகப்பை, பால் போத்தல்கள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.