பக்கங்கள்

பக்கங்கள்

27 செப்., 2012


திமுகவுக்கு மேலும் மத்திய அமைச்சர் பதவி : கருணாநிதி மறுப்பு

: மத்திய அமைச்சரவையில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் விலகியதை அடுத்து மத்தியில் அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ள நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என்ற பிரதமரின் அழைப்புக்கு கருணாநிதி மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தற்போது காலியாக உள்ள மத்திய அமைச்சர் பதவிகளுக்கு இரண்டு திமுக உறுப்பினர்களின் பெயரை பரிந்துரைக்குமாறு மத்திய அரசு கருணாநிதியிடம் கூறியிருந்தது. ஆனால் இதனை ஏற்க கருணாநிதி மறுத்துவிட்டார்.

ஏற்கெனவே, மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த திமுக உறுப்பினர்கள் ராஜா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டதை அடுத்து, இரண்டு இடங்கள் காலியாகவே உள்ளன. அந்த இடங்களுக்கு திமுக இதுவரை தனது கட்சியில் இருந்து யாரையும் பரிந்துரை செய்யவில்லை.  இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்தின் போது, மீண்டும் திமுகவுக்கு அந்த இடங்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டது.

நேற்று சென்னை வந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி, இது குறித்து கருணாநிதியிடம் பேசியதாகவும், ஆனால் இதற்கு கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.