பக்கங்கள்

பக்கங்கள்

22 செப்., 2012

மஹிந்தவுக்கு கறுப்பு கொடி: போபாலுக்குள் புகுந்தனர் ம.தி.மு.க. தொண்டர்கள்
கடும் எதிர்ப்பு மற்றும் பதட்டத்துக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியை அடைந்தார் ராஜபக்ஷ. இதன்போது ராஜபக்ஷவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக மத்தியப் பிரதேச மாநில அரசு மற்றும் பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு பெரும் திரளான ம.தி.மு.க.வினர் போபால் நகருக்குள் புகுந்து கொண்டனர். இருப்பினும் அவர்கள் மேற்கொண்டு சாஞ்சிக்குப் போய் விடாதபடி அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் இப்படி ஒரு எதிர்ப்பை ராஜபக்ஷ சந்தித்ததில்லை என்னுமளவுக்கு இன்று அவருக்கு எதிர்ப்பு காட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிநது.அத்துடன் மத்திய அரசும் கூட இப்படி ஒரு எதிர்ப்பு கிளம்பும் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த அளவுக்கு ராஜபக்ஷவின் இந்திய பயணத்தை கடும் சிக்கலாக்கி விட்டனர் வைகோவின் ஆதரவாளர்கள்.
 
மத்தியப் பிரதேச எல்லைப் பகுதியில் கடந்த 3 நாட்களாக முகாமிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிமுக தொண்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உள்ளூர் இளைஞர்களும், மக்களும் ஆதரவு தெரிவித்திருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
 
இந்த நிலையில் பொலிஸாரின் தீவிர கண்காணிப்பையும் மீறி ரயில் மற்றும் விமானம் மூலம் போபாலுக்குள் நுழைந்துள்ளனர் மதி்முக தொண்டர்கள். இதனால் ம.பி பொலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
தடுத்து நிறுத்தப்பட்டுள்ள ம.தி.மு.க.வினர் கறுப்புக் கொடிகளுடன், ராஜபக்ஷவுக்கு எதிராக கோஷமிட்டு ஈழப் படுகொலையைக் கண்டித்தும், ராஜபக்ஷவைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.
 
போபாலுக்கு வந்த ராஜபக்ஷவை மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் ராம் நரேஷ் யாதவ், முதல்வர் சிவராஜ்சிங் செளஹான் ஆகியோர் வரவேற்று ஹெலிகாப்டர் மூலம் சாஞ்சிக்கு அழைத்துச் சென்றனர். 
 
அங்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் நடைபெறும் புத்த பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் ராஜபக்ஷ.