பக்கங்கள்

பக்கங்கள்

10 செப்., 2012


கிராமம் முன்னேற சன சமூக நிலையங்கள் தேவை: புங்குடுதீவில் துரை கணேசலிங்கம் தெரிவிப்பு
 புங்குடுதீவு அனைத்துலக ஒன்றியங்களின் ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் செயலாளர் நாயகமுமான துரை கணேசலிங்கம் அவர்கள் புங்குடுதீவு ஐங்கரன் சனசமூக நிலையத்தை திறந்து வைத்தார்.
“ஊருக்கு நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்“ என்ற தாரக மந்திரத்துடன் உருவாக்கப்பட்டு கடந்த 34 ஆண்டுகளாகச் செயற்பட்டுவரும் புங்குடுதீவு ஐங்கரன் சனசமூக நிலையத்தின் ஐங்கரன் முன்பள்ளியின் பெயர்ப் பலகையைத் திரை நீக்கம் செய்து வைத்து, இதன் நிறுவனரும், புங்குடுதீவு அனைத்துலக ஒன்றியங்களின் ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் செயலாளர் நாயகமுமான துரை கணேசலிங்கம் அவர்கள் உரையாற்றினார்.
கிராமத்தின் கலை கலாசாரங்களை வளர்ப்பதிலும் சமூகசேவைகள் செய்வதிலும் சனசமூக நிலையங்களின் பங்கு முக்கியமானது. அவ்வகையில் புங்குடுதீவில் பன்னிரண்டு வட்டாரத்திலும் பன்னிரண்டு சனசமூக நிலையங்கள் இயங்கிவருகின்றன.
எனவே ஐங்கரன் சனசமூக நிலையம் நூலகம், கல்யாண மண்டபம், அன்னதான மண்டபம், தாக சாந்தி நிலையம் என்பனவற்றை உள்ளடக்கி ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டு இயங்கி வருகிறது. அத்துடன் தற்போது சுமார் பன்னிரண்டு இலட்சம் ருபாய் செலவில் ஐங்கரன் முன் பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்அரிய பணியின் செயற்பாட்டிற்கு ஒத்துழைத்தவர்கள் போற்றுதற்குரியவர்கள். எனவே ஐங்கரன் சனசமூக நிலையம் புங்குடுதீவிலே முதன்மை பெற்ற சனசமூக நிலையமாகச் செயற்படுவதற்குக் காரணம் திட்டமிட்டுச் செயலாற்றுதல,, திறமைமிக்க நிர்வாகம், ஒருமுகப்பட்ட தலைமையின் கீழ் கட்டுப்பாட்டுடன் இளைஞர்கள் இயங்கி வந்துள்ளமையாகும்.
இச்சனசமூக நிலையத்தின் அடுத்த கட்டமாக, “வாழ்வாதார மேம்பாட்டு நிதியம்" ஒன்றினை உருவாக்கி ஒரு குடும்பத்திற்கு 50,000 ரூபாவரை சுயதொழில் வேலை வாய்ப்புக்களை வழங்குவதாகும்.
இத்திட்டத்தின் கீழ் கனடாவைச் சேர்ந்த சு.குமரதாசன் அவர்கள் ஊடாகத் வசந்தன் அவர்களுக்கு ரூபா 50,000 கையளிக்கப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்த நாடுகளில் எம்மில் பலர் பாலைக்குடித்துவிட்டு பஞ்சணையில் படுத்துறங்கும் போது எமது கிராமத்தில் சில ஜீவன்கள், படுக்கப் பாய் இன்றி குடிக்கக் கஞ்சியின்றி பரிதப்பிப்பதை எண்ணாமல் வாழ்ந்து வருகின்றோம்.
எம் சமூகத்தைப் பரந்த வட்டத்துக்குள் இட்டுச்செல்லும் நோக்குடனே சன சமூக நிலையங்கள் பணியாற்றுகின்றன. புலம் பெயர் நாடுகளில் 12,000 க்கு மேற்பட்ட எமது கிராமத்து மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
தாங்கள் செய்யும் சிறு உதவிகள் நேரடியாகவோ, தங்கள் நாட்டில் உள்ள புங்குடுதீவு அமைப்புக்கள் ஊடாகவோ, தங்களது கிராமத்தில் பிரதேச சபைகளின் செயற்பாட்டில் இயங்கிவரும் சனசமூக நிலையங்கள் ஊடாகவோ தங்கள் உதவிகளைச் செய்வது காலத்தின் அவசிய தேவையாகும்.
சனசமூக நிலையங்கள் வருடாந்த ஆண்டு அறிக்கை, நிதி அறிக்கை கிராமங்கள் பிரதேச சபைக்குச் சமர்ப்பிக்க வேண்டும். எனவே தவறுகளுக்கு இடம் எற்படாது. தாங்கள் இவ்வாறு செயற்பட்டால் வளமின்றிக்கிடக்கும் புங்குடுதீவு பொன்கொடு தீவாக மாறும் என்பதில் வியப்பேதுமில்லை. என தெரிவித்தார்.