பக்கங்கள்

பக்கங்கள்

24 செப்., 2012


கிழக்கில் மு.காங்கிரஸின் முதலமைச்சர் இரண்டரை வருடம் பதவி வகிப்பார்! மீறினால் பாரதூர விளைவுகள் ஏற்படும்: ஹசன் அலி
கிழக்கு மாகாணசபையில் இரண்டாவது பகுதி பதவிக்காலத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரே முதலமைச்சராக பதவி வகிப்பார். இவ் உடன்பாடு மீறப்படுமாயின் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி எச்சரித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் காங்கிரஸின் சிபாரிசின் பேரிலேயே கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பதவி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நஜீப் ஏ மஜீதுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள விடயத்தை நான்தான் நஜீப் ஏ மஜீதுக்கு முதன் முதலாகத் தெரிவித்தேன்.
இரண்டாவது பகுதி பதவிக்காலம் அதாவது இரண்டரை வருடகாலத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் மாகாணசபை உறுப்பினர் ஒருவரே முதலமைச்சராக இருப்பார். இதற்கான உடன்பாடு ஆளும் கட்சியுடனான பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்டுள்ளது. அது மீறப்படுமானால் மிகவும் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் அனைவருமாக மேற்கொண்ட முடிவின்படியே அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்ததாக அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வலிந்துபோய் அரசாங்கத்தின் காலடியில் விழவில்லை என்றும், வேண்டுகோளின் நிமித்தம் சுயகௌரவத்தை இழக்காமல் மிகவும் முக்கியமான கோரிக்கைகளுடனேயே ஒத்துழைப்பு வழங்க முன்வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.