பக்கங்கள்

பக்கங்கள்

22 செப்., 2012


திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மத்திய அமைச்சர்கள் ராஜினாமா

இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வெள்ளிக் கிழமையன்று பிரதமரிடம் ராஜினாமா கடிதத்தை அளிப்பார்கள் என்று அக்கட்சியின் தலைவர் மமதா பேனர்ஜி  அறிவித்திருந்தார். மேலும் இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தங்களின் ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்துள்ளனர். டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானிய கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த திரிணாமுல் காங்கிரஸ், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற தீர்மானித்து இருந்தது.
அதன் படி பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ்  அமைச்சர்கள், தங்களது ராஜிநாமா கடிதங்களை அளித்தனர். ராஜிநாமா செய்தவர்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் ரயில்வே அமைச்சருமான முகுல் ராய் மட்டுமே காபினட் அந்தஸ்துள்ள அமைச்சராவார்.
இவரைத் தவிர, தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் சி.எம். ஜாதுவா, நகர்ப்புற மேம்பாட்டு இணை அமைச்சர் சௌகதா ராய், ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சிசிர் அதிகாரி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் சுதீப் பண்டோபாத்யாயா, சுற்றுலாத்துறை இணையமைச்சர் சுல்தான் அகமது ஆகியோரும் அடங்குவர்.
இதேபோல், மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவையும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வாபஸ் பெற்றிருக்கிறது. இதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜியிடம் அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் அளித்தனர். தங்களது முடிவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.