இலங்கை தொடர்பில் திருப்தியில்லை; நடவடிக்கை எடுக்க அமெ.தயங்காது |
இலங்கையின் அரசியல் மற்றும் இதர நிலைவரங்கள் குறித்து முழுமையாகத் திருப்தி அடைய முடியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கை அரசு அளித்த உறுதிமொழிகள் குறித்து ஆக்கபூர்வமான பிரதிபலிப்புகள் இல்லாதபட்சத்தில் எதிர்காலத்தில் அதற்கேற்றவாறான நடவடிக்கைகளை எடுக்க தாம் பின்னிற்கப் போவதில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்திப்பு ஒன்றில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ்ஸா ஐரிஸ் அமெரிக்காவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிசெனும், தமிழ்க்கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தமிழ்க் கூட்டமைப்புப் பிரதிநிதிகளிடம் விரிவாகக் கேட்டறிந்த அலிஸ்ஸா ஐரிஸ், அரசியல் தீர்வு விடயம் தாமதமாவது குறித்தும் விரிவாகப் பேச்சு நடத்தியுள்ளார் .
"இலங்கை கடந்த ஜெனீவா தீர்மானத்துக்குப் பின்னர் ஆக்கபூர்வமாக எதனையும் செய்ததாகத் தெரியவில்லை. இலங்கை தொடர்பில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அளிக்கப்பட உறுதிமொழிகள் குறித்து ஆக்கபூர்வமான பிரதிபலிப்புகள் இல்லாத பட்சத்தில் எதிர்காலத்தில் அமெரிக்கா அதற்கேற்றவாறான நடவடிக்கைகளை எடுக்க பின்னிற்காது'' என்றும் அலிஸ்ஸா ஐரிஸ் இந்தச் சந்திப்பில் தெரிவித்தார் என்று "உதயன்' அறிவித்தது.
|
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼