பக்கங்கள்

பக்கங்கள்

8 டிச., 2012


கிளிநொச்சி, வவுனியாவில் 6 கட்சிகள் இணைந்து போராட்டங்கள் நடாத்த தீர்மானம்
யாழ். பல்கலைக்கழக மாணவர்களினதும், வடக்கில் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களின் விடுதலையை வலியுறுத்தியும் எதிர்வரும் 10ம், 14ம் திகதிகளில் கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெறும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற 6 கட்சிகள் இணைந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி விடயம் தொடர்பில் தெரிவித்திருக்கின்றார்.
ஏற்கனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட 6 கட்சிகள் இணைந்து யாழில் மாபெரும் எழுச்சியுடனான போராட்டமொன்றை நடத்தியிருந்தன. இதன் தொடர்ச்சியாக சமகால பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் ஒரு அமைப்பை உருவாக்குவதென தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி அமைக்கப்பட்ட 6 கட்சிகள் இணைந்து இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருந்தன.
இச்சந்திப்பின் போது சர்வதேச மனிதவுரிமைகள் தினமான எதிர்வரும் 10 ம் திகதி கிளிநொச்சியிலும், 14ம் திகதி வவுனியாவிலும் சர்வதேசத்தின் கவனத்தையீர்க்கும் வகையிலான போராட்டங்களை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டதுடன், மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் எதிர்காலத்தில் முளைக்கும் எனவும் குறிப்பிட்டார்.