பக்கங்கள்

பக்கங்கள்

24 டிச., 2012


பொய் வழக்கில் ஈழத் தமிழ் இளைஞர்கள் கைது: சிங்கள அரசின் ஏவலுக்குப் பணிவதா?
தமிழக, இந்திய அரசின் போக்குகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்!
- தொல்.திருமாவளவன்.

சென்னை, பல்லாவரம் அருகே தங்கிவரும் ஈழத் தமிழ் இளைஞர்கள் 10 பேரை அண்மையில் தமிழக க்யூ பிரிவு உளவுத் துறையினர் திடீரெனக் கைது செய்து அவர்களில் நால்வரை மட்டும் பொய் வழக்கில் சிறைப்படுத்தியுள்ளனர். மிச்சமுள்ள 6 பேர் என்ன ஆனார்கள் என்று இதுவரை தெரியவில்லை.

சிறைப்படுத்தப்பட்டுள்ள நான்கு இளைஞர்களும் தமிழக அரசுக்கு எதிராகவோ அல்லது இந்திய அரசுக்கு எதிராகவோ எத்தகைய குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்று அதே உளவுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியிருப்பதாக ஏடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும், அவர்கள் பொய் வழக்குகளில் சிறைப்படுத்தப்பட்டிருப்பது ஏன் என்று விளங்கவில்லை. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மற்ற 6 இளைஞர்களையும் இன்னும் ஏன் விடுவிக்கவில்லை என்பதும் தெரியவில்லை.

தமிழகக் காவல்துறையின் இந்தத் திடீர் அதிரடி நடவடிக்கையின் பின்னணியில் சிங்கள அரசு இருப்பதாகவும் தெரியவருகிறது. அதாவது, அண்மையில் கொழும்பு நகரத்தில் பிடிபட்ட ஈழத் தமிழ் இளைஞர்கள் இருவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுடைய நண்பர்கள் தமிழ்நாட்டில் பல்லாவரம் பகுதியில் சிலர் தங்கியிருக்கிறார்கள் என்றும் சிங்கள ஆட்சியாளர்கள் இந்திய அரசுக்குத் தெரிவித்ததாகவும், அதனடிப்படையில் தமிழக அரசுக்கு இத்தகவல் தரப்பட்டு கொழும்பில் பிடிபட்ட இளைஞர்களின் நண்பர்கள் என சந்தேகத்தின் பெயரில் இவர்களை க்யூ பிரிவு உளவுத் துறையினர் கைது செய்திருக்கிறார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலம் தெரிய வருகிறது. தமிழ்நாட்டில் சட்டத்திற்கு விரோதமாகவோ சமூகத்திற்கு விரோதமாகவோ எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபடாத அந்த இளைஞர்களை திடீரெனக் கைது செய்திருப்பதற்கு வேறென்ன பின்னணியாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. சிங்கள அரசின் ஆணைக்கிணங்கி செயல்படக்கூடிய அளவுக்கு இந்திய இறையாண்மையும் தமிழக அரசின் இறையாண்மையும் வலுவிழந்த நிலையில் இருக்கிறதோ என்கிற கவலையே எழுகிறது.

சட்டப்படி அனுமதி பெற்று இந்தியாவுக்கு வந்து காவல்துறையில் பதிவு செய்து தமிழகத்தில் தங்கியுள்ள ஈழத்து இளைஞர்களை இவ்வாறு பொய் வழக்குகளிலே கைது செய்து ஒடுக்குமுறைகளை ஏவுவது மனிதநேயத்திற்கு எதிரான கொடுஞ்செயலாகும்.

மேலும், விசாரணை என்ற பெயரால் அடைக்கலம் தேடிவந்து அகதிகளாய் வாழும் மக்களை அச்சுறுத்துவது அகதிகள் தொடர்பான சர்வதேசச் சட்ட விதிகளுக்கு எதிரானதாகும். தமிழக மற்றும் இந்திய அரசுகளின் இத்தகைய போக்குகளை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் நால்வரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், விசாரணை என்ற பெயரால் கடத்தப்பட்ட 6 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக்கொள்வதுடன் ஈழத் தமிழர்களை அச்சுறுத்தும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.

இவண்
தொல்.திருமாவளவன்