பக்கங்கள்

பக்கங்கள்

13 டிச., 2012


இராணுவத்தில் இணைக்கப்பட்ட யுவதிகள் சிலர் கிளி.வைத்தியசாலையில் அனுமதி-பா.உ. சி.சிறீதரன் பார்வையிட தடை
இலங்கை இராணுவத்தில் அழுத்தங்களால் இணைக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த பெண்கள் இராணுவ முகாம்களில் பலநெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
இவ்வாறு இணைக்கப்பட்ட இளம் தமிழ் யுவதிகள் மிகஅதிகளவான உளவியல் பாதிப்புக்கு உள்ளாகி இராணுவமுகாம்களில் மிகுந்த வதைபட்டு வருகின்றனர்.
இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட யுவதிகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கதைவிட்டு வந்த சிறிலங்கா படைதரப்பின் தமிழ்பெண்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையின் அச்சுறுத்தல் நடவடிக்கை கிளிநொச்சி வைத்தியசாலையில் மனநிலை பாதிக்கப்பட்டு தமிழ்யுவதிகள் அனுமதிக்கப்பட்டதன் மூலம் வெளியாகியுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து அவர்களை பார்வையிட சென்ற பா.உறுப்பினர் சி.சிறீதரன் இராணுவ உத்தரவின் பேரில் வைத்தியசாலை நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்.
பா.உறுப்பினர் சி.சிறீதரன் இது தொடர்பாக மாவட்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி கார்த்திகேயனிடம் கேட்டபோது தனக்கு பா.உறுப்பினரை பார்பதற்கு அனுமதி கொடுக்கவெண்டாமென இராணுவம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசாங்கத்தின் பல அட்டூழியங்கள் அண்மைய நாட்களில் இடைவிடாது அரங்கேறிவருவது இங்கு குறிப்பிடதக்கது.
2ம் இணைப்பு
இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 13 பெண்கள் மருத்துவமனையில்...
அண்மையில் இலங்கை இராணுவத்துக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து சேர்த்துக்கொள்ளப்பட்ட பெண்களில் ஒரு தொகுதியினர் உளவியல் ரீதியான சுகயீனம் காரணமாக கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை உறவினர்கள் மூலம் தான் அறிந்துகொண்டதாகக் கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அவர்களை பார்ப்பதற்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்ற போது தான் அங்கு அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
இருப்பினும் தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், தனக்கு தன்னுடைய பிரதேச மக்களை சென்று பார்ப்பதற்கு சிறப்புரிமை தனக்கு உள்ளது. ஆகவே அதற்கான அனுமதி வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் தான் கேட்டதாகவும், அதற்கு இராணுவத்தின் அனுமதி தேவை என்று அவர்கள் கூறியதாகவும் சிறிதரன் கூறியுள்ளார்.
இதேவேளை, சுகயீனம் காரணமாக மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தப் பெண்களின் உறவினர்கள், அவர்களை பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக பெற்றோர் தெரிவித்தனர்.
தனியான வார்ட் ஒன்றில் 13 பேர் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒரு பெண்ணின் தந்தை தெரிவித்தார்.
தன்னுடைய பிள்ளையும் ஏனைய சில பிள்ளைகளும் பேய் பிடித்தது போல ஆடி, பல்லைக் கடித்தபடி மயங்கி விழுந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை ஒரு சில நிமிடங்களில் அவர்கள் மீண்டும் சுயநினைவு பெற்று இயல்பாக கதைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து உடனடியாக இராணுவத் தரப்பினரை தொடர்பு கொள்ள முடியவில்லை.