பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜன., 2013


மதுரை மல்லிகைக்கு புவிசார் குறியீடு! டிரேட் மார்க் துணை பதிவாளர் தகவல்! விவசாயிகள் வரவேற்பு
நறுமணம் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மதுரை மல்லிகைப் பூவிற்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. தரம் மற்றும் நன்மதிப்பிற்கு சான்றாக விளங்கும் இந்த புவிசார் குறியீடு மதுரை மல்லிக்கு வழங்கப்படுவதாக டிரேட் மார்க் துணை
பதிவாளர் சின்னராஜா ஜி.நாயுடு 17.01.2013 வியாழன் அன்று தெரிவித்தார். இதற்கான சான்றிதழ் வரும் ஏப்ரல் மாதம் மதுரையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் 
என்றும் அவர் கூறினார்.
இந்த மல்லிகைப் பூவானது மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. நறுமணம், தடித்த இதழ்கள், நீண்ட காம்பு மற்றும் தாமதமாக விரியும் தன்மை ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். 
புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதையடுத்து, மதுரை மல்லிக்கு ஒரு சட்ட பாதுகாப்பும் கிடைத்துள்ளது. அதன் பெயரை முறைகேடாக பயன்படுத்தினாலோ, கலப்படம் செய்து விற்றாலோ சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். 
மதுரை மல்லிகை விவசாயிகள் சங்கம் சார்பில் புவிசார் குறியிடு பதிவகத்திற்கு தொடர்ந்து மனுக்கள் அனுப்பப்பட்டன. அதனை பரிசீலித்த, பதிவகம், பொதுமக்களிடம் இருந்து அதற்கு எந்த எதிர்ப்பும் இல்லாததால், மதுரை மலிக்கு புவிசார் குறியீடு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முடிவினை மல்லிகை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.