பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2013


புங்குடுதீவு தந்த கல்வியாளன் வித்யாஜோதி புலேந்திரன்

யாழ் மண்ணில் உள்ள பழம்பெரும் கிராமங்க ளிலே ஆன்மீகமும், கலைச்செழிப்பும் பொருண்மியம் மிக்கோரும் பெற்ற தீவகத் தின் நடுநாயகமாகத் திகழும் பழம்பெரு கிராமம் புங் குடுதீவு. கற்றோரும் சான்றோரும் செழுமையுடன் வாழ்ந்த இப் பெருமைசேர் கிராமத்தில் கல்வியுடன் வணிகம் சார் குடும்பத்தில் 1939.07.21ம் திகதி காலஞ்சென்றவர்களான திரு பொன்னம்பலம் சின்னையா அவர்களுக்கும் திருமதி கனகாம்பிகை அவர்களுக்கும் மூன்றாவது புத்திரராக முன்னாள் வடக்குக் கிழக்கு மாகாண மேலதிகப் பணிப்பாளர்
திரு புலேந்திரன் மலேசியா நாட்டில் பிறந்தார். தனது இனத்துக்கும் சமூகத்துக்கும், கல்வித்தொழிலுக்கும் பெருமை சேர்த்த அன்னார், கடந்த 12.12.2012ல் கனடாவில் தனது 73ம் அகவைதனில் காலமானார். அவரது வாழ்வின் கல்விசார் அனுபவங்களையும் கல்வி மூலம் தமிழ்ச் சமூக வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய சேவைகளையும் இதன்கண் நினைவுகூர்வது மனித விழுமியங்களை நேசிக்கும் ஒவ்வொருவரதும் கடமையாகும்.
கல்விச்சான்றோன்
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற கூற்றுக்கிணங்க கல்வி ஒருவனின் நல்வாழ்வுக்கு வித்தாகும். மனிதன் வாழ்வாங்கு வாழ நல்வழிகாட்டுவது கல்வி. இது கொடுக்கக்கொடுக்க குறைவற்ற செல்வமாகும் இவ் அருங்கருத்துக்களுக்கொப்ப முன்னாள் வடக்குக் கிழக்கு மாகாண மேலதிகப் பணிப்பாளர் திரு புலேந்திரன் அவர்களின் வாழ்வும் அமைந்தது. கல்வியின் அவசியத்தை அவரின் பெற்றோர் நன்கறிந்திருந்தனர். தம் தனையன் நன்கு படித்து சிறப்புடன் வாழவேண்டும் தமிழுக்கும் எம் இனத்துக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற தந்தை தாயாரின் கனவுடன் மலேசியா நாட்டின் ஆரம்பக் கல்வியின் பின் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியிற் பயின்றார். பெற்றோரின் கனவை நனவாக்குவது போல் திரு புலேந்திரன் அவர்கள் இளமைக்காலந்தொட்டு கல்வி, விளையாட்டு என்பவற்றில் மிக அக்கறையுடன் ஈடுபட்டார். அக்காலத்தில் அதிபர் ஓறேற்றர் சுப்பிரமணியம், அவரது மாமனார் வித்துவான் ஆறுமுகம் அவர்கள் கண்காணிப்பில் பல்துறைத் திறன் கொண்ட நல்மாணாக்கராக புலேந்திரன் திகழ்ந்தார். இக்கல்லூரியில் இருந்து பேராதனைப் பல்கலைக்கழகம் தெரிவான இவர் மறைந்த பேராசிரியர்கள் வித்தியானந்தன் செல்வநாயகம், இந்திரபாலா, கல்வியியலாளர் சந்திரசேகரம், கணபதிப்பிள்ளை ஆகியோரின் கண்காணிப்பில் ஆங்கிலமும் அருந்தமிழும் ஒருங்கே கற்றார்.
பேராதனை குறிஞ்சிக்குமரன் ஆலயம், பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் ஆகியவற்றின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் முக்கிய பங்குகொண்டுழைத்த பெருமைக்குரியவர்களுள் திரு புலேந்திரனும் ஒருவராவர்.
பல்கலைக்கழகப் பட்டத்தைப்பெற்று தனது தந்தையாரின் திருகோணமலை வர்த்தகத்துக்கு உறுதுணையாக இருந்த இவருக்கு திருகோணமலை இந்துக்கல்லூரியில் ஆசிரியர் நியமனம் கிடைத்தது. அக்காலத்தில் இக்கல்லூரியில் அதிபராக இருந்து மறைந்த சிவபாலன் அவர்கள் இவரது ஒழுக்கம், நுண்ணறிவு, ஈடுபாடான கற்பித்தல் திறன் என்பவற்றைக் கண்ணுற்று திருகோணமலை மாவட்டத்தில் முதன்முதலாக உயர்கல்வி வகுப்புக்களை ஆரம்பித்தார். தொடர்ந்து அடுத்தவருடமே இடம்பெற்ற முதலாவது உயர்தரப் பரீட்சையில் ஒரே தரத்தில் நான்குபேர் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு சென்றனர். இதன் மூலம் திருகோணமலை மாவட்ட மாணவர்களுக்கான பல்கலைக்கழக நுழைவாயிலைத் திறந்து விட்ட பெருமகனாக அமரர் திரு புலேந்திரன் போற்றப்பட்டார்.
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றும் தருதற் பொருட்டு என்ற வள்ளுவர் வாய் மொழிக்கமைய ஆழமாகக் கற்கும் ஆற்றல் அவருக்கு ஆசிரியப் பயிற்சியாளர்கள் மத்தியிலும் நல்ல மதிப்பைத் தந்தது. இவ்வாறு கற்பிக்கும் ஆற்றல் கற்றல் ஆற்றலை வளரச்செய்யும்.
அதிபர் சேவை
திரு. புலேந்திரன் 1975 இல் அதிபர் சேவைக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டார். மல்லிகைத்தீவு மத்திய கல்லூரியின் அதிபராக விளங்கிய காலத்தில் அக்கல்லூரியின் வளர்ச்சிக்காக அருந்துணையாற்றினார். இக்கல்லூரியின் வளர்ச்சியினால் அயல்கிராம மக்கள் அனைவரும் இக்கல்லூரியிலேயே தமது பிள்ளைகளைச் சேர்க்கலாயினர்.
உயர்நிலைக் கல்விச் சேவைகள்
அதிபர் சேவையில் நுழைந்து ஒரு சில ஆண்டுகளுக்குள்ளாகவே உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்வுபெற்று கொழும்பில் கல்வி அமைச்சில் கடமையாற்றியபோது இவரது திறமையைக் கண்ணுற்ற அதிகாரிகள் வடக்கு கிழக்கு மாகாண விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பை இவரிடம் கையளித்தனர். விரைவில் கல்விப் பணிப்பாளராக உயர்வு பெற்று யாழ்ப்பாணத்தில் மேலதிகக் கல்விப்பணிப்பாளராகவும் பின் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் கல்விப்பணிப்பாளராகவும் பொறுப்பேற்று மிகவும் சுறுசுறுப்பான கட்டுக் கோப்பான கல்வி நிர்வாக அதிகாரியாக கடமையாற்றினார்.
இவர் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் கல்விப்பாளராகக் கடமை புரிந்த காலம் மிகவும் கடினமான போர்ச்சூழற் காலமாகும். இக்காலத்தில் இம்மாவட்டங்களின் கல்வி வளர்ச்சி எவ்வகையிலும் பாதிப்படையாதிருக்க அம் மாவட்டங்களிலேயே முழுமையாகத் தங்கியிருந்து சேவையாற்றினார். இவ்வகையில் ஆசிரியர் பலருக்கு முன்மாதிரியாகவும் அவர்களின் நலன்களையும், பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தியதுடன் மாணவர்களின் கல்வி பாதிப்படையாதிருக்க அரும்பாடுட்டார்.
பின்னர் திருகோணமலை மாகாண அமைச்சில் மேலதிகக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்று தனது சேவையைத் தொடர்ந்தார். தனது ஓய்வின் பின் பதவி நீடிப்பை பெற முயற்சிகள் மேற்கொள்ளாது தனது மாமனாரின் இறப்பை அடுத்து கொழும்பில் தமது குடும்ப வணிக நிறுவனத்துக்கு ஒத்துழைப்பு நல்கினார்.
கல்விப் பாரம்பரியங்களினூடாக வளர்ந்த திரு புலேந்திரன் அவர்களின் கல்விச்சிந்தனைகள் முற்போக்கான கருத்துக்களைக் கொண்டவை. திரு புலேந்திரன் அவர்களின் வாழ்வும் பணியும் மனிதகுலத்துக்கு அவரை ஒரு சுயநலமற்ற சிந்தனையாளராக, நல்வழிகாட்டும் ஆசானாக தனது சமூகத்தின் கல்விமேம்பாட்டில், அக்கறைகாட்டும், புதிய கருத்துக்களைக் கொண்ட கல்வியாளராகக் காண்பிக்கின்றது. அவர்களின் கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டியவை. அவரது கல்விப் பணியை கல்வித்துறையினர் பின்பற்றுவதன் மூலம் அவர் சிந்தனைகளுக்கு மேலும் வலுச்சேர்ப்பது காலத்தின் தேவையாகும்.
அவரது ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.