பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2013


இறுதி போட்டியில் ஆஸி. அணிக்கு வெற்றி: தொடர் சமநிலையில் முடிவு

சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் சமநிலையில் நிறைவுற்றுள்ளது. 

இன்று இடம்பெற்ற ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 33 ஓட்டங்களால் வெற்றிபெற்றதை அடுத்து தொடர் சமநிலையில் நிறைவடைந்துள்ளது. 

ஹொபார்ட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்த்தன அவுஸ்திரேலிய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

அவுஸ்திரேலிய அணி சார்பில் மீண்டும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஹுகேஸ் இலங்கை அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 138 ஓட்டங்களைப் பெற்று தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். ஒருநாள் போட்டியில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தவர் ஹுகேஸ். 

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் பெரேரா, தில்ஷான், மலிங்க, குலசேகர ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை வீழ்த்தினர். 

பதிலுக்கு 248 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 215 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை தழுவிக் கொண்டது. 

இலங்கை சார்பில் மெத்திவ்ஸ் 67 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் தோர்டி, ஹென்ரிகியூஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 

முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணியும் 2ம் 3ம் போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றிபெற்றுள்ளதுடன் 4ம் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டு 5ம் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றுள்ளது.