பக்கங்கள்

பக்கங்கள்

19 மார்., 2013

மாணவர் கூட்டமைப்பின் போராட்டத்தில் பங்கேற்குமாறு வைகோ அழைப்பு
வரும் 20ம் தேதி நடைபெறவுள்ள மாணவர் கூட்டமைப்பின் போராட்டத்தில் பங்கேற்குமாறு வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

2009 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலில் சிங்களக் கொலைகார அரசைப் பாராட்டித் தீர்மானத்தை நிறைவேற்றச் செய்த இந்திய அரசு, கடந்த ஆண்டு  ஈழத் தமிழரின் விடியலுக்கு வழிகாட்டாத அமெரிக்கத் தீர்மானத்தை மேலும் நீர்த்துப்போக வைத்த இந்திய அரசு, இன்றைய சூழலில் தமிழகத்தின் இலட்சக்கணக்கான மாணவர்கள் சுதந்திரத் தமிழ் ஈழம் கோரியும், தமிழ் இனப்படுகொலை நடத்திய சிங்கள அரசை குற்றக் கூண்டில் நிறுத்த சுதந்திரமான பன்னாட்டு விசாரணை கோரியும், வீரம் செறிந்த உறுதிமிக்க அறப்போர் நடத்தும் நிலையில், ஜெனீவாவில் சிங்கள அரசுக்கு ஆதரவான வேலைகளைத் தீவிரமாகவும், இரகசியமாகவும் இந்திய அரசு செய்து வருகிறது.

அமெரிக்கத் தீர்மானத்தில் அழுத்தமான திருத்தம் வேண்டும் என்று ஒருசிலர் குரல் கொடுக்கும் அதே நேரத்தில், அமெரிக்கத் தீர்மானத்தில் சிங்கள அரசை வலியுறுத்தும் ஒருசில வாசகங்களையும் நீக்கச் செய்துவிட்டது. குறிப்பாக, இலங்கைத் தீவில் சுதந்திரமான விசாரணை மேற்கொள்ள மனித உரிமை ஆணையர் அறிவித்த பரிந்துரையை நீக்கி உள்ளதாகத் தெரிகிறது.

தரணி வாழ் தமிழர்களையும், தமிழ் ஈழ உணர்வாளர்களையும், ஆவேசமாகப் புரட்சி பூபாளம் ஒலிக்கும் தமிழக மாணவர்களையும் இந்த மோசடி வேலைகளால் ஏமாற்ற முடியாது. சரியான, முறையான இலக்கைத் தீர்மானித்து, தமிழக மாணவர்கள் தொடர்ந்துள்ள உரிமைப் போர், ஈழத் தமிழருக்கு நீதியும், பொதுவாக்கெடுப்பு மூலம் சுதந்திரத் தமிழ் ஈழம் மலரும் வரை புதியபுதிய பரிமாணம் எடுத்து நீடிக்கும்.

தமிழ்க் குலம் மாணவர் சமுதாயத்துக்கு என்றென்றைக்கும் நன்றிக்கடன்பட்டு உள்ளது. எனவே, தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டு அமைப்பின் சார்பில், 20 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் தொடர் முழக்கப் போராட்டத்தில் அனைத்து மாணவர்களும் பங்கு ஏற்க வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.