பக்கங்கள்

பக்கங்கள்

22 மார்., 2013


இலங்கை பிரச்சினை: மாணவர்கள் டெல்லியை முற்றுகையிட திட்டம்
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். தமிழகம் முழுவதும் சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டங்கள், முழக்கங்கள், உண்ணாவிரத அறப்போராட்டம் மூலமும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
கடந்த 10 நாட்களாக இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசை கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் அரசியல் தலைவர்களின் கவனத்தை திசை திருப்பியது.
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நடந்த ஓட்டெடுப்பில் இந்தியா ஆதரவாக வாக்களித்தாலும் எங்கள் போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் போராட்டக்குழு அறிவித்து உள்ளது.
இலங்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறும் வரை மாணவர்களின் போராட்டம் ஓயாது என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் திவ்யா கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-
மாணவர்கள் மட்டுமே நடத்திய போராட்டத்தை இனி மக்களிடம் எடுத்து சென்று மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும். அப்போதுதான் இது வெற்றி பெறும்.
பஸ்நிலையம், ரெயில் நிலையங்களில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து துண்டு பிரசுரம் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அடுத்தகட்டமாக மாணவர்களை ஒன்றுதிரட்டி டெல்லியை முற்றுகையிட முடிவு செய்துள்ளோம்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். இலங்கை பிரச்சினைக்காக வாரத்தில் இருநாட்கள் மட்டும் போராட்டமும், தெருமுனை பிரசாரமும் மேற்கொள்ளப்படும். எங்களது அடுத்த கட்ட போராட்டம் குறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.