பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2013


வெல்லட்டும் ஜெனீவா நோக்கிய தமிழர் பேரணி: தமிழர் நடுவம் பிரான்ஸ்

எமது தாயக மக்களிற்கான நீதி வேண்டி ஜெனீவா நோக்கிப் புறப்படுவதும், ஜ.நா. மனித உரிமைச் சபை முன்றலிலே திரண்டு நின்று, தமிழ்மக்களின் அபிலாசைகளை வலியுறுத்துவதும், தமக்கான பெரும் கடமையாக புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களும் உலகத் தமிழ் மக்களும் வரித்துக் கொண்டுள்ளனர்.  
இந்தப் பெருங்கடமையை, சோர்வின்றி தளர்ச்சியின்றி பல ஆண்டுகாலமாக புலத்துத் தமிழர்கள் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றனர்.தமிழ் மக்களின் தொடர்ச்சியான நீதிகேட்டுப் போராடும் இந்தச் சனஎழுச்சிப் போர்வடிவம், அனைத்துலகத்தின் கண்களையும், அதன் செவிகளையும், மனக் கதவுகளையும் தற்போது மெல்லத் திறந்திருக்கின்றன என்றே சொல்லவேண்டும்.
முள்ளிவாய்க்கால் பேரவலமும், அதற்கு முன்னான பல தசாப்தகால அழிவுகளும் அவலங்களும், இதனைச் சரிவர அனைத்துலக அரங்கிற்குக் கொண்டு சேர்ப்பதில் பாடுபட்ட பலரின் கடும் உழைப்பும், மனித உரிமை அமைப்புக்களின் கரிசனையும், இந்நிலை கனிந்துவரக் காரணம் எனலாம்.
சிங்களத்தின் இனஅழிப்புக் கொடுங்கோல் ஆட்சிமுறையின், அகத்தையும் புறத்தையும் நன்கு அறிந்து வைத்திருக்கின்ற அனைத்துலக சமூகம், தமிழ்மக்களின் நீதிக்கான குரலை செவிமடுக்க ஆரம்பித்திருக்கின்றது.
தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வு ஒன்றை முன்வைக்கவேண்டும் எனச் சிங்கள அரசை அது வலியுறுத்துகின்றது. தற்போதைய அனைத்துலக அரசியல் நிலைப்பாடு, தமிழ் மக்களைப் பொறுத்தவரை அதிமுக்கியமானது.
தற்போதைய உலக அரசியல் நிரந்தரமாக இப்படியே இருந்துவிடப் போவதுமில்லை, சிங்களத்தின் காட்டுமிராண்டித்தனமான இனஅழிப்பு அரசியலையோ, தமிழ்மக்களின் நிர்க்கதி நிலைகுறித்தோ தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தப் போவதுமில்லை.
தற்போதைய சர்வதேசச் சூழல் எமக்குக் கிடைத்த பெரும் வரமாகவே கருதப்படவேண்டும். இதனை சரிவரக் கையாண்டு, தமிழ் மக்களிற்குச் சார்பான ஒரு பெறுமதியான விளைவைக் கண்டடைதல் என்பது தற்போது அனைத்துலகிலும் வாழும் தமிழ்மக்களையும், தமிழ் அமைப்புக்களையுமே சாரும்.
பொறுப்புணர்வுடன், தம் தம் நலன்சார்ந்த எண்ணப்பாடுகளைக் களைந்து, பொது நோக்கோடு, தமிழ் மக்களின் விடுதலை என்ற பெரு விருப்போடு, சாத்தியமான இடங்களில், உண்மையுடனும் நேர்மையுடனும் கைகோர்க்கவேண்டியது அனைவரினதும் கடமை.
ஜெனீவா போராட்டம் என்பது, காலம் எமக்கிட்ட கட்டளை.
முள்ளிவாய்க்காலின் பின்னர், தமிழரின் எழுச்சியும் போர்க்கோலமும் மெல்லவடிந்து இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விடும் என்ற சிங்களத்தின் தப்புக் கணக்கை, பொய்ப்பித்து, புலத்தமிழனின் விடுதலைக்கான எழுச்சி இன்னும் பன்மடங்கு, வியாபித்து விஸ்வரூபம் எடுத்துள்ளதென்ற செய்தியை பறைசாற்றவேண்டிய கடப்பாடு எமக்குண்டு.
தமக்கிடையே, சிறு சிறு கோடுகளை இட்டுக்கொண்டாலும், சிங்கள இனவெறியை எதிர்ப்பதென்ற வகையிலும், தமிழ்மக்களின் விடுதலையை வென்றெடுப்பதென்ற உறுதியிலும் ஒத்த குறியுடனேயே இருக்கின்றார்கள் புலத்துத் தமிழர்கள் என்ற செய்தியை ஓங்கி உரைக்கவேண்டிய கட்டாயம் எங்களது.
ஜெனீவா போராட்ட களத்தை, எமக்குக் கிடைத்த சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டு, தமிழ் மக்கள் எல்லோரும், அங்கு திரண்டு, எமது தேசிய ஒருமைப்பாட்டையும், தேசியவிடுதலையின் பேரிலான எமது உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தவேண்டும் என்பதே, பிரான்ஸ் தமிழர் நடுவத்தின் அவா.
அங்கு எழுப்பப்படும் முழக்கங்கள். சிங்கள இனவெறியரசின் சிந்தையைக் கலங்கடிக்கவேண்டும்.தமிழ் மக்களிற்கு நீதி வழங்கும் விடயத்தில், சர்வதேசத்தின் 'அயர்வை' போக்கவேண்டும்.
தமிழராய் வெல்வோம்.
தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்.
தமிழர்நடுவம்- பிரான்ஸ்
- See more at: http://tamilwin.com/show-RUmryDTXNYlo3.html#sthash.deea9w5d.dpuf