பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூன், 2013

பறிபோகிறது கிழக்கு முதல்வரின் பதவி – அமீர் அலிக்கு வாய்ப்பு

கிழக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில், ஏற்பட்டுள்ள முரண்பாட்டை அடுத்து, கிழக்கு முதல்வர் நஜீப் ஏ.மஜீத்தின் பதவி பறிக்கப்பட்டு, புதிய முதல்வராக அமீர் அலி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் மத்தியில், கிழக்கு முதல்வர் மற்றும் ஆளுனருக்கு எதிராக கடும் அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து. இவர்கள் இருவரையும் மாற்றக் கோரி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சபை நடவடிக்கைகளை கடந்த ஒரு மாதமாகப் புறக்கணித்து வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடுவதற்காக கிழக்கு மாகாணசபையின் ஆளும்கட்சி உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டனர்.

எனினும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கிளிநொச்சி சென்றிருந்ததால் அமைச்சர்கள், மைத்திரிபால சிறிசேனவையும், சுசில் பிறேம் ஜெயந்தவையும் மாகாணசபை உறுப்பினர்களிடம் பேசிப் பிரச்சினையை தீர்க்குமாறு கூறியிருந்தார்.

இதையடுத்து அவர்கள் இருவரும் சுமார் இரண்டு மணிநேரம் நடத்திய பேச்சுக்களை அடுத்து, நேற்று மாகாணசபை அமர்வுகளில் பங்கேற்கும்படி உத்தரவிட்டனர்.

அதேவேளை சிறிலங்கா அதிபர் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை.

இந்தநிலையில் அந்த உத்தரவையும் மீறி நேற்றைய கூட்டத்தையும் ஆளும்கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களும் புறக்கணித்தனர்.

இதனால், சிறிலங்கா அதிபர் கிழக்கு முதல்வர் பதவியை நஜீப் ஏ மஜீத்திடம் இருந்து பறித்து விட்டு, அமீர் அலியிடம் அந்தப் பதவியை வழங்கலாம் என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமீர் அலி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் சார்பில் மாகாணசபை உறுப்பினராக உள்ளார்.

முன்னர் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்ததுடன் அமைச்சராகவும் இருந்தவர்.

பெரும்பாலான ஆளும்கட்சி உறுப்பினர்கள் இவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக, ஆளும்கட்சியின் உறுப்பினர்கள் கிழக்கு மாகாணசபை அமர்வைப் புறக்கணித்து வரும் நிலையில் முதல்வர் நஜீப்.ஏ.மஜீத்தும் தேசிய சுதந்திர முன்னணியின் ஜயந்த விஜேசேகரவும், சபை முதல்வர் ஆரியவதி கலப்பதியும் மட்டுமே மாகாணசபை அமர்வுகளில் பங்கேற்றனர்.

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐதேக உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.