பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூன், 2013

காடுவெட்டி ஜே.குரு அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்
  அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் சண்முகம் கடந்த 23ம் தேதி 3 அவதூறு
வழக்குகள் தொடர்ந்தார். அரியலூர் காமராஜர் திடலில் பாமக சார்பில் பிப். 7ம் தேதி நடைபெற்ற அரியலூர் சட்டப்பேரவை தொகுதி பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், வன்னியர் சங்க தலைவரும் ஜயங்கொண்டம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜே.குரு ஆகியோர், முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியதாக, தனித்தனியாக இரண்டு வழக்குகளும், ஜயங் கொண்டம் கீழக்குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற பட்டதாரி விழாவில் பேசிய ஜே.குரு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியதாக மற்றொரு வழக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் மீது ஒரு வழக்கும், வன்னியர் சங்க தலைவர் குரு மீது இரண்டு வழக்குகளும் என  3 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்தார்.

  இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி உத்திராபதி, வன்னியர் சங்க தலைவர் குரு ஜூன். 6ம் தேதியும், பாமக நிறுவனர் ராமதாஸ் ஜூன். 13ம் தேதியும் அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.
   அதன்படி, சென்னை புழல் சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வன்னியர் சங்க தலைவர் ஜே.குரு வியாழக்கிழமை அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உத்திராபதி, இரண்டு வழக்குகளையும் ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து, நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
  அரியலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி உத்திராபதியிடம், ஜே.குரு சார்பில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், குருவுக்கு உயர் ரத்த அழுத்தம், கழுத்து, முதுகு தண்டு வலி இருப்பதால் அதற்கு சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி உத்திராபதி, சென்னை புழல் சிறையில் மேற்கண்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் உள்ளதா என போலீஸார் வெள்ளிக்கிழமை (ஜூன். 7) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டார்.