பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூலை, 2013

யாழில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி யின் மாநகர சபை உறுப்பினர் கைது! கட்சியிலிருந்து நீக்கம்!
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த கப்பங்கோரல் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் கடத்தல்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஈ.பி.டி.பி யின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவந்த கொள்ளைகள் மற்றும் கப்பங்கோரல்கள் ஆட்கடத்தல்கள் உள்ளிட்ட சட்டவிரோதச் செயற்பாடுகளை இவர் முன்னின்றி வழிநடாத்தி வந்துள்ளார்.
யாழ்.வர்த்தகர்களிடம் பல லட்சம் ரூபா பணங்களை கப்பமாக அறவிட்டுள்ளதோடு அவற்றை தட்டிக் கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.
பல வர்த்தகர்களிடம் பணம் தவிர பல பவுண் நகைகளையும் இவர் பறித்து எடுத்துள்ளார். மேலும் உதவி செய்வதாக கூறி பல பெண்களின் வாழ்க்கையையும் இவர் நாசம் செய்துள்ளதாக
குற்றஞ்சாட்டப்படுகின்றது.
நேற்று மாலை கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர் தொடர்ந்து விசாணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை இச்சம்பவங்களுக்கு யாழ்.மாநகர சபை மேயர் திருமதி யோககேஸ்வரி பற்குணராஜாவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பியினரும் ஆதரவளித்து வந்துள்ளனர்.
ஏற்கனவே அமெரிக்கா அரசாங்கம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கப்பங்கோரல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்ததை இச்சம்பவம் உறுதிப்படுத்துவதாக உள்ளது.
2ம் இணைப்பு
யாழ். மாநகர சபை உறுப்பினர் விஜயகாந் ஈ.பி.டி.பியிலிருந்து நீக்கம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும், யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சுதர்சிங் விஜயகாந் என்பவரை கட்சியினது அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் இடைநிறுத்தியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள் தெரிவித்துள்ளார்.
குற்றச்செயல்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசார் தமது விசாரணைகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு நாம் தடையாக இருக்க மாட்டோம் என்பதுடன், எமது கட்சி அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இந்த நிலையில்,  அவர் கட்சி செயற்பாடுகள் அனைத்திலும் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான விசாரணைகள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர்பீடம் ஆராய்ந்து முடிவெடுக்குமென்றும் ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கமல் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே விஜயகாந் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து உடனடியாகவே நீக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் கட்சிக்கும் அவருக்கும் இடையிலான தொடர்புகள் எதுவும் இல்லையெனவும் அவருடனான தொடர்புகள் யாவும் நீக்கப்படும் அதேவேளை, கட்சிக்கும் அவருக்கும் இடையிலான தொடர்புகள் துண்டிக்கப்படுவதாகவும், இதன்பின்னர் கட்சி சார்ந்த விடயங்களுக்காக அவருடன் எவரும் தொடர்பு கொள்ள வேண்டாமென்றும் யாழ்.மாவட்ட அமைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.