பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜூலை, 2013

நாட்டுமக்களையும் அரசியல்வாதிகளையும் ஏமாற்றி தந்திரமான அரசியலில் ஈடுபட்டுவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வலையில் தற்போது தயாசிறி விழுந்துவிட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

ராஜகிரியவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தயாசிறி ஜயசேகரவின் தீர்மானம் இன்று நேற்று எடுக்கப்பட்டதல்ல. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். இந்த வகையில் மஹிந்த ராஜபக்ஷவின் தந்திர அரசியலில் தயாசிறி சிக்கிவிட்டார்.

வடமேல் மாகாண சபைத் தேர்தலில் முதன்மை வேட்பாளரக ஆளும் கட்சி சார்பாக போட்டியிடவே தயாசிறி அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் பல காரணங்களை ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக தெரிவித்து வருகின்றார். இது முற்றிலும் திசை திருப்பும் செயற்பாடாகும்.

அரசாங்கத்திற்குள் தற்போது குழப்பகரமான நிலைமையே காணப்படுகின்றது. வடமேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தினால் வெற்றிபெற முடியாத நிலையியே உள்ளது. இவ்வாறான அடிமட்ட அரசியல் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.