பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூலை, 2013

,


இளவரசன் எப்படி இறந்தார் என்பதனை தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது: ஞானதேசிகன்
தருமபுரி இளைஞர் குறித்த விவகாரத்தில் அரசியலாக்க வேண்டாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இன்று அவர் வெளியிட்ட அறிக்கை :
தர்மபுரி மாவட்டத்தைச் சார்ந்த இளவரசன் தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் ஒரு பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இரு வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் காதலிப்பதென்பது தமிழகத்தில் நடைபெறுகிற ஒரு சாதாரண நிகழ்வுதான். இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஒரு சமூகத்தைச் சார்ந்த சில பேர் இதற்கு சமூக சாயத்தை பூசியதன் விளைவாக அது சமுதாய மோதலாக மாறி, அதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பல வீடுகள் தாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரு சமூகத்தைச் சார்ந்தவர்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் 144 தடை உத்தரவு சில நாட்கள் முன்பு வரை அம்மாவட்டத்தில் இருந்து வந்தது. இந்தச் சூழ்நிலையில் இளவரசன் மரணம் நிகழ்ந்திருக்கிறது. இது மிகவும் வருத்தமளிக்கிறது.
இளவரசன் எப்படி இறந்தார் என்பதனை தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அதேநேரத்தில் இந்த நிகழ்வு சமூக விரோதமாக மாறிவிடக் கூடாது என்பதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
உண்மையை கண்டறியும் முயற்சியில் நீதிமன்றம் தலையிட்டிருக்கிறது. அதே நேரத்தில் இளவரசன் காதலியான திவ்யாவிற்கும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க  வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனிமனித உறவுகள், சமூக பிரச்சினைகளாக மாற்றுவது இந்த சமுதாயத்திற்கு நல்லதல்ல. அதைவிட இந்த உறவுகள், அது சம்மந்தமான பிரச்சினைகளை அரசியலாக்குவது இன்னும் மோசமான விளைவுகளைத்தான் உருவாக்கும் என்பதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இளவரசனின் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.