பக்கங்கள்

பக்கங்கள்

31 ஆக., 2013

ஐ.நா மனித உரிமை ஆணையாளர், ஜனாதிபதி உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சு!- சில சம்பவங்கள் தனிப்பட்டவை: ஜனாதிபதி மஹிந்த
இலங்கைக்கு ஒரு வாரகால உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும் எதிர்க்கட்சி தலைவரையும் சந்திததார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரி மாளிககையில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

எனினும் அவருடன் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
அதேவேளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் சந்தித்தார்.
போருக்கு பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ மனித உரிமை ஆணையாளருக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.
அத்துடன் சர்வதேச சமூகம், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியுடன் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனிடையே நவநீதம்பிள்ளை, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு கேம்பிரிஜ் பிளேஸில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவது, நாட்டின் சட்டத்தின் ஆட்சியை கட்டியெழுப்புவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக சந்திப்பிற்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
அத்துடன் தற்போது நாடு எதிர்நோக்கி நெருக்கடியான சூழ்நிலை தொடர்பாகவும் ரணிலுக்கும், நவீபிள்ளைக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடினார்.
சில சம்பவங்கள் தனிப்பட்டவை: ஜனாதிபதி மஹிந்த
சில சம்பவங்கள் தனிப்பட்டவை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையான இலங்கையர்கள் சகவாழ்வுடனும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக பெரும்பான்மையான இலங்கையர்கள் கருதுகின்றனர்.
இலங்கை தொடர்பில் முன்கூட்டிய தீர்மானங்களை எடுக்கக் கூடாது.
நாட்டின் நிலைமைகளை நேரில் பார்வையிட்டு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, போரின் பின்னரான இலங்கையின் வளர்ச்சியை வரவேற்பதாக நவனீதம்பிள்ளை குறிப்பிட்டார் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.