பக்கங்கள்

பக்கங்கள்

29 ஆக., 2013

ஈஸ்ட்ஹாம் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினருடன் பிரித்தானியத் தமிழர் பேரவையின் சந்திப்பு
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் கமரூனை கலந்து கொள்ள வேண்டாமென பல்வேறு வழிகளில் பிரித்தானியத் தமிழர் பேரவை முயற்சி செய்த வண்ணம் உள்ளது.
அவ்வகையில், மாபெரும் கையெழுத்து வேட்டை ஒன்றை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நடத்தி, அதனை அந்தந்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளித்து வருவதாக பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பிர்மின்காம், கவெண்ட்ரி, விம்பில்டன் ஈலிங் பகுதிகளிலுள்ள வழிபாட்டுத்தலங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் இந்தக் கையெழுத்து வேட்டை சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக தொழில் கட்சியைச் சேர்ந்த ஈஸ்ட்ஹாம் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் Stephen Timms அவர்களை பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள் சிலர் இன்று சந்தித்தனர்.
பிரதமர் கமரூன் பொதுநலவாய நாடுகள் கூட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்ததை பற்றிய தனது அதிருப்தியை தெரிவித்த திரு.டிம்ம்ஸ், 2009 நடந்த துயர நிகழ்வுகளை ஞாபகப்படுத்தினார்.
மேலும் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவி. பிள்ளை அவர்களின் அறிக்கை வெளிவந்த பின்னர் பிரதமர் தனது முடிவை மீள் பரிசீலனை செய்வார் என தான் எதிர்பார்பதாகவும் கூறினார்.
இதேவேளை, கையெழுத்து பெற வரும்போது அனைவரும் ஆதரவினை வழங்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.