பக்கங்கள்

பக்கங்கள்

16 செப்., 2013

விருதுநகர் மதிமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்!
விருதுநகரில் நடைபெற்ற ம.தி.மு.க. மாநில மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 14 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அதன் விவரம்
:

* காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 9½ ஆண்டுகளாக வரலாறு காணாத ஊழல்களில் ஊறி திளைத்து வருகிறது. 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், ஆதர்ஸ் வீட்டு வசதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் ஊழல், ராணுவ ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் என அடுக்கடுக்கான ஊழல் புகார்களுக்கு ஆளான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை பதவியில் இருந்து அகற்றுவதுதான் நாட்டின் எதிர்கால நலனை விரும்புகின்ற ஒவ்வொருவரின் கடமையாகும்.
எனவே வருகிற 2014 நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுவது என்றும், மத்திய ஆட்சி பொறுப்பில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசை அகற்றுவதை இலக்காக கொண்டு புதிய வியூகம் வகுப்பது என்றும் இந்த மாநாடு பிரகடணம் செய்கிறது.
* மத்திய காங்கிரஸ் அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் இந்திய பொருளாதாரம் பெரும் அபாயகரமான கட்டத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்திய நாட்டின் பொருளாதார இறையான்மையை மீட்டெடுக்கவும், தற்சார்பு பொருளாதார கொள்கைகளை செயல்படுத்தவும், மத்தியில் மாற்று அரசு அமைப்பதுதான் ஒரே தீர்வு என்று ம.தி.மு.க. கருதுவதுடன், அதற்காக நாடாளுமன்ற தேர்தல் களத்தில் மக்களை தயார் படுத்தும் பணியில் முழு வீச்சில் இறங்குவது என்றும் இந்த மாநாடு தீர்மானிக்கிறது.
* இலங்கையில் தமிழ் ஈழமே தீர்வு என்ற கருத்து உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. எனவே தமிழ் இனக்கொலை புரிந்த ராஜபக்சே கூட்டத்தை சர்வதேச நீதிமன்ற குற்றக்கூண்டில் நிறுத்தி தண்டிப்பதையும், பொது வாக்கெடுப்பு மூலம் சுதந்திர தமிழ் ஈழத்தை அமைப்பதையும் ஒரே இலக்காக கொண்டு ம.தி.மு.க. பாடுபடும்.
தமிழகத்திலும் உலகம் முழுவதும் இதற்கான ஆதரவை திரட்டுகின்ற பணியில் ம.தி.மு.க. தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும்.
* இலங்கையில் தமிழீன கொலை நடத்திய கொடியவன் ராஜபக்சே தலைமையில் நவம்பர் 17, 18 தேதிகளில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த இந்திய அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கொலை குற்றவாளியான ராஜபக்சே 2 ஆண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்புகளுக்கு தலைவராகிவிடுவார். இது ராஜபக்சேவை கொலை குற்றத்தில் இருந்து தப்பிக்க வைக்க இந்திய அரசு மேற்கொள்ளும் முயற்சியாகும். இதை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
எனவே இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்றும், ஈழத்தமிழர் படுகொலை செய்த இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கி வைக்க வேண்டும் என்றும், காமன்வெல்த் அமைப்பை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

* தமிழகத்தில் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்க முழுமுதற் காரணம் தமிழக அரசு நடத்தி வரும் மதுக்கடைகள் தான். எனவே தமிழக அரசு மதுக்கடைகளை உடனே மூட வேண்டும் என்றும், முழு மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இந்த மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
* மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவு பாது காப்புச் சட்டம் முரண்பாடாக உள்ளது. குறைபாடுகள் நிறைந்த உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசுக்கு ம.தி.மு.க. கண்டனம் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டிற்கு மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்படும் 36.78 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை கிலோ ரூ.3 விலையிலேயே தொடர்ந்து வழங்க வேண்டும் என மாநாட்டின் மூலம் வலியுறுத்துவது.
* தமிழகத்தில் ஆங்கில மொழி வழிப்பயிற்சியை கைவிட்டு தாய்மொழி கல்வி வளர்ச்சிக்கு ஆக்கம் தர வேண்டும்.
* மத்திய அரசின் தமிழர் விரோத போக்கை வன்மையாக கண்டிப்பதுடன், இலங்கையில் இருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்துவது.
* நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுஉலையை அகற்ற வேண்டும். மேலும் இடிந்தகரை மக்கள் மீது போடப்பட்டுள்ள 2 லட்சத்திற்கும் மேலான பொய் வழக்குகளை தமிழக அரசு உடனடியாக நிபந்தனையின்றி வாபஸ் பெற வேண்டும்.
* காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை பெறும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்கு முறை குழுவை மத்திய அரசு உடனடியாக அமைத்திட வேண்டும்.
* தமிழகத்தின் முக்கிய ஆறுகளான தாமிரபரணி, வைகை, காவிரி, பாலாறு உள்ளிட்ட 33 ஆற்றுப் படுகைகளில் மணல் கொள்ளை நடக்கிறது. மேலும் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதிகளில் தாது மணல் கொள்ளை நடைபெறுகிறது. இந்த சட்டவிரோத மணல் கொள்ளைகளை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநாட்டின் மூலம் வலியுறுத்துவது.
* வருங்காலத்தில் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து விவசாயிகள் மற்றும் பொது மக்களை பாதுகாக்க நதிகள் அனைத்தையும் தேசிய மயமாக்கிட வேண்டும் என்றும், முதல் கட்டமாக தென்னக நதிகளை இணைத்திட வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை மாநாட்டின் மூலம் வலியுறுத்துவது.
* தமிழகம் முழுவதும் புதிய ரெயில்வே திட்டங்களை கொண்டுவர வேண்டும். மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சென்னை– கன்னியாகுமரி, சென்னை– செங்கோட்டை, சென்னை– தூத்துக்குடி ஆகிய வழித் தடங்களில் கூடுதலாக சரக்கு ரெயில்களை இயக் கிட முன்வர வேண்டும். சென்னை–கன்னியாகுமரி இடையே இரட்டை வழிப் பாதையை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவது.
* தென் மாவட்ட மக்கள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலும், அரபு நாடுகளிலும் பணியில் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மதுரை விமான நிலையத்தில் இருந்து அரசு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சர்வதேச விமான சேவை அளிக்க வேண்டும் என மத்திய அரசை மாநாட்டின் மூலம் வலியுறுத்துவது.