பக்கங்கள்

பக்கங்கள்

19 செப்., 2013




திருமணத்துக்கு காதலன் மறுப்பு:
சென்னை அண்ணா மேம்பாலத்தில்
இருந்து விழுந்து காதலி தற்கொலை

கோடம்பாக்கம் காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி (26). இவர் தனது தாயார் குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தார். அஞ்சலி தேனாம்பேட்டையில் உள்ள ஒரு பிரபல அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார். 


இந்நிலையில் அஞ்சலி புதன்கிழமை நண்பகல் அண்ணா மேம்பாலத்தில் நடந்து வந்தார். பாலத்தின் நடுப்பகுதிக்கு வந்த அவர், பாலத்தின் மேலிருந்து நுங்கம்பாக்கத்துக்கு செல்லும் உத்தமர் காந்தி சாலையில் குதித்தார்.
சாலையில் நடுவே பலத்த ரத்தகாயங்களுடன் பெண் உயிருக்கு போராடுவதை பார்த்த வாகன ஓட்டிகளும், பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். உடனே அங்கிருந்த போலீஸாரும், பொதுமக்களும் அஞ்சலியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அஞ்சலி இறந்தார். இச் சம்பவத்தால் நண்பகல் வேளையில் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணையில் கூறப்படுவதாவது, அஞ்சலி மேற்கு வங்கம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அவருக்கும் தினேஷ் பஸ்வான் என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றிருப்பதும், அவர்களுக்கு 6 வயதில் மகள் இருப்பதும் தெரியவந்தது. 
இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டினால் அஞ்சலி தனது தாயார் குடும்பத்துடன் வசித்து வந்தாராம். மேலும் அஞ்சலி தான் வேலை செய்யும் கட்டடத்தில் மற்றொரு நிறுவனத்தில் பணிபுரியும் புவனேஷ்வர் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் 6 மாதமாக காதலித்து வந்த நிலையில், புவனேஷ்வர் அஞ்சலியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்ட அஞ்சலி தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாரால் சந்தேகிக்கப்படுகிறது. அஞ்சலி தற்கொலை செய்வதற்கு முன்னால் தனது தங்கை அனிதா என்பவருடன் செல்போனில் பேசினாராம். இது தொடர்பாக புவனேஷ்வரிடம் தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.