பக்கங்கள்

பக்கங்கள்

23 செப்., 2013

இலங்கை வடக்கு மாகாணத்தில் கால்நூற்றாண்டுக்குப் பிறகு ஒரு விடியல் தோன்றியுள்ளது. அங்கு நடந்துள்ள தேர்தலில், மாகாணத்தின் மொத்தமுள்ள 38 இடங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு 30 இடங்கள் கிடைத்துள்ளன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்கெனவே அறிவித்திருந்ததைப்போல, முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக பொறுப்பேற்பது உறுதியாகிவிட்டது.
இலங்கையில், இறுதிப் போருக்குப் பிறகு பல்வேறு கருத்து மாறுபாடுகள் இருந்தபோதிலும்கூட, ஐந்து கட்சிகள் இணைந்து இத்தேர்தலைச் சந்தித்திருப்பதும், முதலமைச்சர் வேட்பாளரை முன்னிலைப்படுத்தியதும், இலங்கைவாழ் தமிழர்களிடையே தற்போது நிலவும் ஒற்றுமையை வெளிக்காட்டியுள்ளது. இந்த ஒற்றுமை, தேர்தல் வெற்றிக்குப் பிறகும் நீடிக்கும் என்று நம்புகிறோம். நீடிக்க வேண்டும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு 74 சதவீத வாக்குகள் கிடைத்திருப்பதையும், இலங்கை அதிபர் ராஜபட்ச சார்ந்துள்ள கூட்டணி, மிகக் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளதையும் பார்க்கும்போது, ஆளும்கட்சி மீதான எதிர்ப்பை இலங்கைத் தமிழர்கள் இத்தேர்தலில் காட்டியியிருக்கிறார்கள் என்பது புரிகிறது.
13ஆவது அரசியல் சட்டத் திருத்தம் மூலம் மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டாக வேண்டும். அதனால், இந்த வெற்றி, தமிழர்களுக்குப் புதிய அதிகார பலத்தைத் தரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இது முழுமையான அதிகாரம் இல்லை என்பதும், இம்மாகாண ஆளுநராக ஒரு சிங்களரைத்தான் ஆளும்கட்சி நியமிக்கும் என்பதும், ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தமிழ்க் கட்சிகள் தாங்கள் விரும்பிய மாற்றங்களைச் செய்வது இயலாது என்பதும் தெரிந்தாலும்கூட, தமிழர்களுக்குத் தங்களை நிர்வகித்துக் கொள்ளும் அதிகாரம் கிடைத்திருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. முதலில் தற்போது கிடைத்துள்ள வெற்றியைக் கொண்டாட வேண்டும். பிறகு முழுஅதிகாரம் பெறுவதற்கான அரசியல் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

விக்னேஸ்வரனுக்கு வாழ்த்துகள்!-Dinamani 

"இவ்வளவு தமிழர்கள் வடக்கு மாகாணத்தில் இயல்பாக வாழ்வதற்கும் ஜனநாயக ரீதியில் தைரியமாக எதிர்த்து வாக்களிக்கவும் முடிந்திருக்கிறது என்றால், இலங்கை அரசு எவ்வளவு நியாயமாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை உலகம் அறியும்' என்று
அதிபர் ராஜபட்ச தரப்பினர் பேசுகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளிலும், தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் வாழ்வுரிமை பறிக்கப்படவில்லை என்றும் பேசுவதற்கு இந்தத் தேர்தல் முடிவை இலங்கை அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடும். சர்வதேசப் பார்வையாளர்களின் மேற்பார்வையில்தான் இலங்கை வடக்கு மாகாணத் தேர்தல் நடந்தது என்பதையும் அதனால்தான் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க முடிந்தது என்பதையும் யாருமே பேசப்போவதில்லை. அதனால் பாதகம் ஏற்பட்டுவிடவும் போவதில்லை.
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, "தனி ஈழம் அமையும்' "தனித்தமிழீழத்துக்கு முன்னெடுப்பு' என்று சிலர் சொல்வதை முதலமைச்சர் பதவியேற்கப்போகின்ற நீதியரசர் விக்னேஸ்வரன் மறுத்துள்ளார். "இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்' என்று அவர் கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்பாக அவர் அளித்திருந்த பேட்டியிலும்கூட, "தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்னையை வைத்துப் பந்தாடுகின்றன. இதனால் விழும் அடி எங்களுக்குத்தான். தமிழீழம் மட்டுமே தீர்வு என்று தமிழக அரசியல் கட்சிகள் பேசும்போது, இங்குள்ள எங்களை இலங்கையின் பெரும்பான்மையினரும் அரசும் அச்சத்துடன் பார்க்கின்றனர். எங்கள் பிரச்னைக்கான தீர்வு எங்களிடம்தான் உள்ளது' என்று பேசியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள அமைப்புகள் "தனித்தமிழீழம் மட்டுமே இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வாக இருக்கும்' என்றும், "கொழும்பு காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது' என்றும் போராட்டங்களும் விழிப்புணர்வுக் கூட்டங்களும் நடத்திக்கொண்டிருக்கும்போது, இலங்கை வடக்கு மாகாண முதல்வராகப் போகிறவர் இதுகுறித்து மாற்றுக்கருத்து கொண்டிருப்பார் என்றால் அதற்கு காரணங்கள் பல உண்டு. தற்போதைய அமைதியான சூழல் கெட்டுப்போகக் கூடாது என்பதும், கடந்த 30 ஆண்டுகளாகப் போராடிய சலிப்பும்கூட காரணமாக இருக்கலாம். அவர்கள் விரும்புவதைப்போல, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்னையில் அமைதி காப்பது அவர்கள் மேலும் காலுன்ற உதவும்.
வடக்கு மாகாணத்தில் முதல்வராகப் பதவியேற்க இருக்கும் நீதியரசர் விக்னேஸ்வரனின் கரங்களை வலுப்படுத்துவதும், அங்கே ஆட்சி அமைக்க இருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போதிய அதிகாரங்களுடன் செயல்படுவதும்தான் நமது உடனடி நோக்கமாக இருக்க வேண்டும். அதற்கு உலகளாவிய தமிழர்களின் வாழ்த்தும், இந்திய அரசின் துணையும் அவசியம்!
ஈழத் தமிழர் சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கி இருக்கிறது. வாழ்த்தி வரவேற்போம்!