பக்கங்கள்

பக்கங்கள்

2 செப்., 2013

நவநீதம் பிள்ளை எமக்கு பாடம் கற்பிக்க முடியாது - பொதுபலசேனா 
எம் நாட்டிற்கு நவநீதம்பிள்ளை பாடம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.


நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டாலும் அதில் இலங்கைக்கு எவ்வித தாக்கமும் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளின் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசம் கருத்தில் கொள்ளவில்லை. இலங்கை இராணுவத்தினர் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றியதே சர்வதேசத்திற்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் தவறாகத் தெரிகின்றது.

மேற்குலக நாடுகள், விடுதலைப் புலி இயக்கம் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் ஆசையினை நிறைவேற்றும் வண்ணமே மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் செயற்படுகின்றார்.

சிங்களவர் தமிழர் ஒற்றுமையாக வாழும் தற்போதைய சூழலினை மீண்டும் பிரித்து நாட்டில் மீண்டுமொரு பிரிவினைவாத யுத்தத்தினை ஏற்படுத்த நவநீதம்பிள்ளை நினைத்தால் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா செய்யும் நாசகாரச் செயற்பாட்டினை இலங்கையிலும் மேற்கொண்டுஇ இங்கு மூவினத்தவர் மத்தியிலும் விரோதத்தினை ஏற்படுத்த நினைத்தால் அதை நாம் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்.

நவநீதம்பிள்ளை பக்கச் சார்பாக செயற்படாது நியாயமான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.