பக்கங்கள்

பக்கங்கள்

27 அக்., 2013

அபிவிருத்தியும் அறிவு வளர்ச்சியும் முன்பள்ளி மாணவர்களிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும்: வடமாகாண உறுப்பினர் 
எந்தவொரு அபிவிருத்தி என்றாலும் அறிவு வளர்ச்சி என்றாலும் அது அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.
அல்லாரை அபிராமி பாலர் பகல் பராமரிப்பு நிலையத்தின் 10 ஆண்டு நிறைவு விழாவும் கலை விழாவும் இன்று நடைபெற்றது.
அந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நான் வடமாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டது முதல் இன்று வரை அதிகமான முன்பள்ளி சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளேன்.
முன்பள்ளி விடயங்களில் தேர்தலுக்கு முன்னரே நான் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததால் முன்பள்ளி நிகழ்வுகளில் கலந்து கொள்ள என்னை அழைக்கும் போது அதற்கு முன்னுரிமை கொடுத்து நான் அதிகமாக கலந்து கொள்கின்றேன்.
எந்தவொரு அபிவிருத்தி என்றாலும் அறிவு வளர்ச்சி என்றாலும் அது அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். அடிமட்டத்திலிருந்து தொடங்குவதாக இருந்தால் அது முன்பள்ளி சிறார்களிலிருந்து தான் ஆரம்பிக்கபட வேண்டும்.
முன்பள்ளி என்பது ஒரு பாடசாலை அல்ல. பெற்றோர் மற்றும் பிள்ளைகளை வழிநடத்து ஆசிரியர்களும் இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இது பாடசாலைக்கு முன்பதாக உள்ள நிலை அவ்வளவு தான்.
பாடசாலையில் கற்பிப்பது போன்று ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என்றோ, பாடசாலை மாணவர்கள் போல பிள்ளைகள் துலங்குவார் என்று எதிர்பார்க்க கூடாது. முன்பள்ளி என்பது தாயின் அரவணைப்பு அடுத்தபடியாக பிள்ளைகளை அரவணைக்கும் ஒரு இடமாக உள்ளது.
ஒரு பிள்ளை சிறு வயத்தில் தவறாக வழிநடத்தப்பட்டால் அது பிள்ளைகளின் எதிர்காலத்தை தவறானதாக மாற்றி விடும். இதனால் நாம் முன்பள்ளி சிறார்களின் விடயத்தில் அதிக சிரத்தை கொண்டிருக்க வேண்டும்.
கடந்த காலத்தில் எங்கள் பிள்ளைகளை வழிநடத்த முடியாத சூழல் இருந்தாலும் இன்று எங்களது பிள்ளைகளை வழிநடத்த கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் எமது முன்பள்ளிகள் அனைத்தையும் கண்காணிப்புக்குள் கொண்டு வர வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியில் உள்ள வடமாகாண சபை காலத்திலேயே முன்பள்ளிகளை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்நிகழ்வில் அல்லாரை சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீரஞ்சன், அ.தக பாடசாலை பிரதி அதிபர் தென்மராட்சி முன்பள்ளி இணைப்பாளர் மாதர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பாடசாலை பழைய மாணவர்கள் பெற்றோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.