பக்கங்கள்

பக்கங்கள்

7 அக்., 2013

தினக்குரல் பத்திரிகையின் ஊடகவியலாளர் அமரர் ரவிவர்மாவுக்கு புளொட் அமைப்பு தனது அஞ்சலி தெரிவித்துள்ளது.
அவ் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தினக்குரல் பத்திரிகையின் பிரபல ஊடகவியலாளர் ரவிவர்மன் என்கின்ற பரமகுட்டி மகேந்திரராஜா மரணமடைந்த செய்தி எம்மையெல்லாம் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 1980களில் புளொட் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்ட ரவிவர்மன், கழக ஊடகங்களின் வாயிலாகவும், புத்தகங்கள் வடிவிலும் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தி வந்தார். பின்னர் கழகத்திலிருந்து விலகி பத்திரிகைத் துறையில் தன்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

ரவிவர்மாவுக்கு தனது இளம்வயதில் இயல்பிலேயே வாய்த்த அறிந்துகொள்ளும் ஆர்வமும், எழுத்தாற்றலும், சிநேகமனப்பாங்கும் அவரை ஒரு தேர்ந்த செய்தியாளராக உருவாக்கியிருந்தது.

ரவிவர்மா, சமூக அக்கறையுடனும், பொறுப்போடும், பக்கச் சார்பின்றி நேர்மையாக துணிந்து நின்று செய்திகளையும், கட்டுரைகள் மற்றும் ஆக்கங்களையும் மக்களுக்கு வழங்கிவந்த ஒரு நீண்டகால பத்திரிகையாளராவார்.

ஒரு செய்தியாளராக இருந்து தமிழ் மக்களுடைய அவலங்களையும், அவர்களின் அன்றாட பிரச்சினைகளையும் வெளிக்கொணர்வதில் முழு மூச்சோடு பணியாற்றிவந்தவர்களில் ரவிவர்மனின் பங்கு அளப்பரியது.

யுத்த காலத்தில் பிரத்தியேகமாக தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விடயங்களை பல்வேறு நெருக்கடிகள் மத்தியிலும் அஞ்சாது செய்திகளாகவும் கட்டுரையாகவும் திறம்பட வெளிப்படுத்துவதில் ரவிவர்மா அயராது பாடுபட்டவர்.

தாம் சார்ந்திருந்த மற்றும் சாராத அரசியல் கட்சிகளுடன் மாத்திரமன்றி சகல தரப்பினரோடும் ஒரு அந்நியோன்ய உறவினைப் பேணிவந்த ரவிவர்மா, சகலருடனும் மிகப் பண்பாகவும், இனிமையாகவும் பழகும் நற்குணம் வாய்ந்தவர்.

கடந்த சில நாட்களாக சுகவீனமுற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் அவர் நேற்றிரவு மரணமடைந்துள்ளார்.

அன்னாரின் இழப்பானது பத்திரிகைத் துறைக்கு மாத்திரமல்லாது தமிழ் சமூகத்திற்கும் ஓர் பேரிழப்பாகும்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கம் அன்னாரின் துணைவியார், மகன்மார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருடனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந் துயரினைப் பகிர்ந்து கொள்வதோடு, அன்னாருக்கு எமது அஞ்சலிகளையும் செலுத்துகின்றோம் என அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.